உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியாக இருக்கும் இந்தியா, இலங்கை அணியுடனான ஒரு நாள் போட்டி தொடரை 27 வருடங்களுக்குப் பிறகு இழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2024 ஆம் வருட டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் இலங்கை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஜிம்பாப்வே தொடருக்கு இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி கில் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்பீர தலைமையில் முன்னணி வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர்களில் விளையாடியது. டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது.
அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்றோர் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்தாலும் இலங்கை அணி இடம் இந்தியா 2-0 என்ற வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் இந்த 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி ஆல் அவுட் ஆகி இருக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா அணியின் 25 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி இருக்கின்றனர்.
வேகப்பந்துவீச்சாளர்கள் 3 விக்கெட்டுகள் மட்டும் வீழ்த்திய நிலையில் 2 வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்துள்ளனர். ஒரு தொடரில் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்தியா அணி அதிக விக்கெட்களை இழந்திருப்பது ஒரு நாள் போட்டிகளில் இதுவே முதல் முறையாகும். இது தொடர்பாக மூன்றாவது போட்டியின் முடிவில் பேசிய இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா இந்திய வீரர்கள் சிறிய மைதானங்களில் விளையாடி பழக்கப்பட்டவர்கள் என தெரிவித்திருந்தார்.
மேலும் இந்திய அணி பெரும்பாலும் நல்ல பேட்டிங் விக்கெட்டுகளில் விளையாடி பழக்கப்பட்டவர்கள் என்பதால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களை நாங்கள் தயார் செய்து வெற்றி பெற்றோம் என தெரிவித்திருந்தார். இவரது பேட்டிக்கு இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்திருக்கிறார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், தீக்ஷனா உண்மையை வெளிப்படையாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய அஸ்வின், இந்திய அணி பெரும்பான்மையான போட்டிகளில் பேட்டிங்க்கு சாதகமான தட்டையான ஆடுகளங்களில் விளையாடுகிறது. மேலும் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மைதானங்கள் அளவில் சிறியவை. ஆனால் இலங்கையில் போட்டி நடைபெற்ற பிரேமதாச மைதானம் பெரிய பவுண்டரி எல்லைக்கோடுகளைக் கொண்டது. இந்த மைதானத்தில் விளையாடும் போது இந்திய பேட்ஸ்மேன்கள் கடும் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
மகேஷ் தீக்ஷனாவின் பேட்டிக்கு விரிவாக விளக்கமளித்த அஸ்வின் ” 80-கள் மற்றும் 90-களில் இந்திய மைதானங்கள் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தன. உள்ளூர் போட்டிகள் நடைபெறும் ஆடுகளங்களும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடுபவர்கள் ஆக இருந்தனர். ஆனால் கடந்த 15 முதல் 20 வருடங்களில் இந்த நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.
அந்தக் காலகட்டங்களில் இந்தியா வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற தடுமாறியது. இதனை மாற்றுவதற்காக இந்தியாவின் ஆடுகளங்களும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பது போல் மாற்றியமைக்கப்பட்டது. தற்போது இதற்கு நல்ல முடிவு கிடைத்திருக்கிறது. இந்தியா அணி ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற முடிகிறது. இந்திய அணி வீரர்களும் வேகப்பந்துவீச்சிக்கு எதிராக சிறப்பாக விளையாடுகின்றனர்.
ஆனால் சுழற் பந்துவீச்சிக்கு எதிராக அவர்களது ஆட்டத்திறன் குறைந்து இருப்பதை நம்மால் காண முடிகிறது. இது பெரிதாக கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஆனாலும் இதனை விரைவில் சரி செய்ய வேண்டும். பேட்டிங் டெக்னிக்கில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இதனை விரைவில் சரி செய்து விடலாம் என அஸ்வின் தெரிவித்தார். மேலும் இந்திய அணி வீரர்கள் சுழற் பந்து வீச்சுக்கு தடுமாறுவதை பார்க்கும் போது ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் இந்திய அணியை வீழ்த்துவதற்கு வரும் காலங்களில் சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான மைதானங்களை அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என தெரிவித்திருக்கிறார் அஸ்வின்.

