ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது. கடைசி நேரத்தில் வந்த அப்துல் சமாத் 10 பந்துகளில் 30 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் ராஜஸ்தான் அணி 181 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியது.
ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்சி இணை தொடக்கம் கொடுத்தது. ஷார்துல் தாகூர் வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் பவுண்டரி அடிக்க, வைபவ் சூர்யவன்சி சிக்சருடன் தொடங்கி ஆச்சரியம் கொடுத்தார். அதன்பின் 2வது ஓவரில் ஆவேஷ் கான் பவுலிங்கிலும் சிக்ஸ் அடித்து லக்னோ அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
வைபவ் சூர்யவன்ஷி அபாரம்
இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை சேர்த்திருந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஐபிஎல் தொடரில் கடந்த 5 இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அடிக்கும் 4வது அரைசதம் இதுவாகும். முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், வைபவ் சூர்யவன்சி 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் வந்த நிதிஷ் ராணாவும் 8 ரன்களில் வெளியேற, ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 94 ரன்களாக இருந்தது. பின் ரியான் பராக் – ஜெய்ஸ்வால் கூட்டணி இணைந்து விரைவாக ரன்களை சேர்த்தது. தேவைக்கேற்ப பவுண்டரியும் அடிக்கப்பட, ராஜஸ்தான் அணி 17 ஓவர்களில் 156 ரன்களை எட்டியது. அப்போது சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 74 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ரியான் பராக் 39 ரன்களில் வெளியேறினார்.
ஆட்டத்தை மாற்றிய ஆவேஷ் கான்
இதனால் கடைசி 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது துருவ் ஜுரெல் – ஹெட்மயர் இணை களத்தில் இருந்தது. பிரின்ஸ் யாதவ் வீசிய 19வது ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீச ஆவேஷ் கான் வந்தார். இந்த ஓவரின் 3வது பந்தில் ஹெட்மயர் 12 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி 1 பந்தில் 4 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.
அந்த பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட, லக்னோ அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கையில் இருந்த ஆட்டத்தை ராஜஸ்தான் அணி மீண்டும் 2வது முறையாக தோற்றிருப்பது அந்த அணி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் லக்னோ அணி வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

