ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து லக்னோ அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய லக்னோ அணி மிட்சல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது.
இதன்பின் மும்பை அணி தரப்பில் வில் ஜாக்ஸ் – ரிக்கல்டன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஷர்துல் தாக்கூர் வீசிய 2வது ஓவரிலேயே வில் ஜாக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆகாஷ் தீப் வீசிய 3வது ஓவரில் ரிக்கல்டன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிரடி காட்டிய நமன் திர்
இதன்பின் நமன் திர் – சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடியாக பேட்டிங் செய்தனர். ஆகாஷ் தீப் வீசிய ஒரே ஓவரில் நமன் திர் 21 ரன்களை விளாச, 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 64 ரன்களை விளாசியது. தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ரன்கள் சேர்க்க, மும்பை அணியின் ஸ்கோர் வேகமாக ஏற்றம் கண்டது.
சிறப்பாக ஆடிய நமன் திர் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் திலக் வர்மா களத்திற்கு வந்தார். ஒரு பக்கம் திலக் வர்மா நிதானமாக ரன்கள் சேர்க்க, சூர்யகுமார் யாதவ் பொறுப்பை எடுத்து கொண்டார். அவர் 30 பந்துகளில் அரைசதம் கடக்க, மும்பை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை சேர்த்திருந்தது. இதனால் கடைசி 30 பந்துகளில் மும்பை வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது.
திலக் வர்மா ரிட்டையர்ட் அவுட்
அப்போது ஆவேஷ் கான் பந்தில் சூர்யகுமார் யாதவ் 67 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஹர்திக் பாண்டியா களம் புகுந்தார். ஆனாலும் லக்னோ பவுலர்கள் பவுண்டரி கொடுக்காமல் பவுலிங் செய்தனர். ஒரு கட்டத்தில் திலக் வர்மாவால் பவுண்டரி அடிக்க முடியாமல் தடுமாற, அவர் ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேறினார். இதனால் கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. ’
கடைசி ஓவரை வீச ஆவேஷ் கான் அழைக்கப்பட்டார். முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா சிக்ஸ் விளாசினாலும், அடுத்தடுத்து ஆவேஷ் கான் கம்பேக் கொடுத்தார். இறுதியாக லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனால் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைவரும் சோகமடைந்தனர்.

