ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியது. கடந்த இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியிடம் அடைந்த தோல்விக்கு ஐதராபாத் அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
சம்பவம் செய்த கேகேஆர்
இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை விளாசியது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் ரகுவன்ஷி 32 பந்துகளில் 50 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 60 ரன்களையும், ரிங்கு சிங் 32 ரன்களையும் விளாசினர். இதன்பின் 201 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
வைபவ் அரோரா வீசிய 2வது பந்திலேயே டிராவிஸ் ஹெட் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்சித் ராணா வீசிய 2வது ஓவரிலேயே அபிஷேக் சர்மாவும் 2 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த இஷான் கிஷனும் 2 ரன்களில் பெவிலியன் திரும்ப, ஐதராபாத் அணி 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த நிதிஷ் ரெட்டியும் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் தோல்வி
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கமிண்டு மெண்டிஸ் 27 ரன்களிலும், அனிகேத் வர்மா 6 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் கிளாசன் 21 பந்துகளில் 33 ரன்களும், கம்மின்ஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஐதராபாத் அணி 16.4 ஓவர்களில் 120 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் கேகேஆர் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
ஐதராபாத் அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட சூழலில், தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருப்பதால், அந்த அணி தோல்வியை தவிர்க்க முடியாமல் போராடி வருகிறது.

