ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை எதிர்த்து கேகேஆர் அணி விளையாடியது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 90 ரன்களை விளாசினார்.
ஏமாற்றிய வெங்கடேஷ் ஐயர்
இதன்பின் 199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கேகேஆர் அணியின் குர்பாஸ் – சுனில் நரைன் இணை களமிறங்கியது. இதில் முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே குர்பாஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, பின் ரஹானே களமிறங்கினார். இருவருமே சில ஓவர்கள் நிதானமாக விளையாட, இதன்பின் 4வது ஓவரில் ரஹானே அட்டாகில் ஈடுபட்டார். ஓரளவிற்கு அதிரடி ஆட்டம் தொடங்கிய போது, சுனில் நரைன் 17 ரன்காளில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் ரஹானே – வெங்கடேஷ் ஐயர் இணை சேர்ந்து ஆடியது. ரஹானே அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸ் என்று விளாசி தள்ள, வெங்கடேஷ் ஐயர் ஒவ்வொரு ரன்னாக எடுத்தார். இதனால் தேவையான ரன் ரேட் உச்சத்திற்கு செல்ல, கேகேஆர் அணி 10 ஓவர்களில் 68 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பின் வெங்கடேஷ் ஐயர் 19 பந்துகளில் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
குஜராத் சம்பவம்
தொடர்ந்து ரஹானேவும் அட்டாக் செய்ய முயன்று 36 பந்துகளில் 50 ரன்களுடன் வெளியேறினார். பின் வந்த ரஸல் சில பவுண்டரிகளை அடித்த நிலையில், 15 ஓவர்களில் கேகேஆர் அணியின் ஸ்கோர் 114 ரன்களை எடுத்தது. ஆட்டம் பரபரப்பாக செல்லும் என்று பார்க்கப்பட்ட போது, ரஸலும் 21 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ரமன்தீப் 1 ரன்னிலும், மொயின் அலி டக் அவுட்டாகியும் பெவிலியன் சென்றனர்.
இதனால் கேகேஆர் அணி வெற்றிக்கு 12 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட, ரிங்கு சிங் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக கேகேஆர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

