நேற்று பஞ்சாப் – கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த மிகுந்த பரபரப்பான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியில் ஆதிக்கம் செலுத்தி நழுவிய போட்டியை மீண்டும் எட்டிப் பிடித்து வெற்றிக் கண்டது. முதலில் பேட் செய்த பஞ்சாப் 15.3 ஓவர்களில் வெறும் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு அணியில் இவ்வளவு குறைவான ஸ்கோரை வெற்றிகரமாக பாதுகாத்தது இல்லை.
ஆனால், ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் பஞ்சாப் அணி, கொல்கத்தாவை 95 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 15 ரன்கள் விததியாசத்தில் வரலாற்றுச் சாதனை படைத்தது. ஸ்பின்னர் சஹல் 4 விக்கெட்டுகளை தன் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். வெறும் 112 ரன்களே என்ற சுலபமான இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய கொல்கத்தா அணி 7/2 என தடுமாறிய நிலையில் கேப்டன் ரஹானே – ரகுவன்ஷி கைக் கோர்த்து ரன்களை மலமலவென சேர்த்தனர்.
இந்தக் கூட்டணி இணைந்து 55 ரன்கள் எடுக்க, 12 ஓவர்கள் மீதமிருக்கையில் பாதி இலக்கை கடந்தனர். அதன் பின்னர் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் யுஸ்வேந்திர சஹாலை அழைக்க, அவரது கூக்லி பந்து ரஹானேவை தவறாக விளையாட வைத்து, காலில் பட்டது. நடுவர் அவுட் கொடுக்க, ரஹானே மறுபரிசீலனைக்கு செல்வது பற்றி நீண்ட நேரம், ரகுவன்ஷியின் அழைப்பின் பேரில் விவாதித்தார். ஆனால் அவர் ரிவ்யூவுக்குச் செல்லவில்லை என்பது தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என அவருக்கு அப்போது தெரியவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, ரீப்ளேயில் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பட்டது தெரிந்தது. ரஹானே மறுபரிசீலனை எடுத்திருந்தால், ஆட்டத்தில் இருந்திருப்பார். இதுக் குறித்து கேப்டன் ரஹானே போட்டி முடிந்த பின்னர் பேசினார். “ மொத்த பழியை நானே ஏற்றுக் கொள்கிறேன். நாம் தவறான ஷாட் ஆடினேன், மேலும் ரிவ்யூவுக்கும் செல்லாமல் தவறு செய்துவிட்டேன். ரகுவன்ஷியிடம் பேசிய போது, அவருக்கும் உறுதியாகத் தெரியாமல் அம்பயர்ஸ் காலாக இருக்கும் என்றார். நாங்கள் உண்மையில் மிக மோசமாக பேட்டிங் செய்தோம். என் மண்டையில் இப்போது என்னென்னமோ ஓடுகிறது. மேலே ரூமுக்கு என்று என் மனதை நானே தேற்றுக் கொள்ள வேண்டும். ” என மிகுந்த வருத்தத்துடன் பேசினார் கேப்டன் ரஹானே.

