நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பட்லர் இந்த வெற்றிக்கு தோனி, கோலி செய்தது
போன்றே நானும் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.
கொல்கத்தாவின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சுனில் நரேன் அதிகபட்சமாக 56 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஸ்கான் மற்றும் குல்தீப்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல் அணியில் ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், மறுபுறம் பட்லர் மட்டும் நிலையாக நிலைத்து நின்று விளையாடிக் கொண்டிருந்தார். ராஜஸ்தான் அணி போட்டியில் எப்படியும் தோற்றுவிடும் என்று அனைவரும் கருதிய நிலையில், தனி ஒரு ஆளாக நின்ற பட்லர் 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்த நிலையில் ராஜஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார்.
பட்லருடன் ரியான் பராக் 34 ரன்கள், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரோமன் போவல் 13 பந்துகளில் 26 ரன்களும் குவித்தனர். கடைசி வரை போட்டியை எடுத்துச் சென்ற பட்லர் 60 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள், ஆறு சிக்ஸர்களுடன் 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
எனவே இந்த வெற்றி குறித்துப் பேசிய ஆட்டநாயகன் ஜாஸ் பட்லர் தோனி கோலி போன்ற வீரர்கள் கடைசிவரை நின்று அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுப்பதை போன்று நானும் விளையாடினேன் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“நம்பிக்கை மட்டுமே இன்றைய போட்டிக்கு மிக முக்கிய காரணம். நான் தொடக்கத்தில் சிறிது தடுமாறினேன். நாம் நினைத்தபடி விளையாட முடியவில்லை என்றால் சிறிது விரக்தி ஏற்படும். நம் மீது நமக்கே சந்தேகம் உண்டாகும்.
இன்னும் எதுவும் முடியவில்லை. நம்பிக்கையுடன் இரு என்று கூறிக்கொண்டே இருந்தேன். இந்த நம்பிக்கையே எனக்கு கை கொடுத்தது. விராட் கோலி, தோனி போன்ற வீரர்கள் கடைசிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெற்றுக் கொடுப்பதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம். இதையேதான் நானும் செய்தேன். எனது அணியின் பயிற்சியாளர் சங்ககாரா எப்போதும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார்.
இதையும் படிங்க:ரோஹித்காக என் வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன்.. பஞ்சாப் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அதிரடி
நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால் பொறுமையாக இருக்க வேண்டும், நம்பிக்கை இழக்க கூடாது போட்டி எப்போது வேண்டுமானாலும் மாறலாம் எனவே அதற்காக காத்திருக்க வேண்டும் என்று கூறுவார். கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த ஆட்டம் என்னுடைய மிகச் சிறப்பான இன்னிங்ஸ் என்று கூட சொல்லலாம். இன்றைய போட்டியில் நான் ஆடிய விதம் எனக்கு திருப்திகரமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

