இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று இரவு மும்பையில் இருந்து புறப்பட உள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் தலைமையில் இந்திய அணியின் செயல்பாடுகள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுப்மன் கில் பேட்டி
இந்த நிலையில் சுப்மன் கில் மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுப்மன் கில் பேசும் போது, எனது கேப்டன்சி ஸ்டைல் நிச்சயமாக யாரையும் பின்பற்றி இருக்காது. அதனை அனுபவம் மூலமாக மட்டுமே சாதிக்க முடியும். ஆனால் ரோகித் சர்மாவை போல் வீரர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும். அவர்களுடன் நல்ல உறவை கட்டமைக்க வேண்டும்.
இந்திய அணியில் பாதுகாப்பு உணர்வை கொடுக்க விரும்புகிறேன். இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா எந்த 3 போட்டிகளில் விளையாட போகிறார் என்பதை முடிவு செய்யவில்லை. அவருடன் இதுதொடர்பாக விவாதிக்க போகிறோம். நிச்சயம் ஆலோசித்த பின்னரே முடிவினை எடுப்போம். அதேபோல் பும்ரா 3 போட்டிகளில் விளையாடுவதும் இந்த தொடரில் கிடைக்கும் வெற்றி, தோல்வியை பொறுத்துதான் அமையும்.
பும்ரா எத்தனை போட்டியில் ஆடுவார்?
இதனை பும்ராவும் நன்றாக அறிவார். பும்ரா போன்ற ஒருவரின் இடத்தை நிரப்புவது எளிதான விஷயம் கிடையாது. ஆனால் இந்திய அணியில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட பும்ரா விளையாடவில்லை. அவர் விளையாடாத போது, அது மற்றவர்களுக்கு வாய்ப்பாக அமையும். இந்திய அணியில் போதுமான பவுலர்களை தேர்வு செய்துள்ளோம் என்று நினைக்கிறேன்.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்கள் பலரும் சிறந்த மனநிலையில் இருக்கிறார்கள். இதனால் டெஸ்ட் போட்டியின் எந்த சூழலில் இருந்தும், இந்திய பவுலர்களால் ஆட்டத்தை மாற்ற முடியும். ஆனாலும் பும்ரா போன்ற ஒருவர் விளையாடும் போது தாக்கம் இன்னும் பெரிதாக இருக்கும். அதனால் வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகளை பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்தார்.

