இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது.
5 விக்கெட்டுகள்
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் 465 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகினர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹாரி ப்ரூக் 99 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 14வது முறையாக பும்ரா ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 210 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இங்கிலாந்து மண்ணில் 3வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதனால் எழுந்து நின்று ரசிகர்கள் அவருக்கு மரியாதை கொடுத்தனர்.
பும்ராவின் சாதனைகள்
அதேபோல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 நாடுகளில் 150 விக்கெட்டுகளுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை ஜஸ்பிரிட் பும்ரா படைத்துள்ளார். இவருக்கு பின் வாசிம் அக்ரம் 146 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.
மொத்தமாக 24.4 ஓவர்களை வீசிய பும்ரா 83 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மால்கம் மார்ஷலை விடவும் சிறந்த பவுலிங் சராசரியை பும்ரா வைத்துள்ளார். இதனால் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு ஜாம்பவானின் உருவாக்கத்தை கண்டு வருவதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

