நடப்பு உலக கோப்பை தொடரின் 33-வது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மும்பையில் வைத்து பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் அணியாக உலகக்கோப்பை அரை இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது
மேலும் இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்தது இந்தியா. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மா நான்கு ரன்னில் ஆட்டம் இழந்தாலும் விராட் கோலி கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 357 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 19 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது . இதன் மூலம் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியுடன் அரை இறுதி போட்டிகளுக்கு முன்னேறி இருக்கிறது. இந்திய அணியின் பந்து வீச்சில் சமி 5 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இலங்கை மற்றும் இந்திய அணிகள் கடைசியாக மோதிக்கொண்ட ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலும் இலங்கை அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வியின் மூலம் இலங்கை உலகக் கோப்பையில் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெரும் வாய்ப்பு ஏறக்குறைய கேள்விக்குறியாகி இருக்கிறது. மேலும் அந்த அணி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் 2025 ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த வருட உலகக்கோப்பையில் முதல் ஏழு இடங்களுக்குள் இடம்பெற வேண்டும். தற்போது அந்த அணி ஏழாவது இடத்தில் இருக்கிறது. மீதி இருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று அந்த இடத்தை உறுதி செய்தால் மட்டுமே சாம்பியன் ஸ்ட்ராபியில் கலந்து கொள்ள முடியும்.
இந்நிலையில் போட்டிக்கு பின் பேசிய இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ்” இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நான் உட்பட எந்த பேட்ஸ்மேனும் சரியாக விளையாடவில்லை. இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். மின்னொளியில் பந்து நன்றாக ஸ்விங் ஆனதோடு சீம் ஆனதால் விளையாடுவதற்கு சிரமமாக இருந்தது. துரதிஷ்டவசமாக இந்த போட்டியில் தோல்வி அடைந்தோம். நாங்கள் முதலில் பந்து வீசியதற்கு காரணம் ஆடுகளம் மெதுவாக இருந்தது தான்”என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எங்கள் அணியின் மதுசங்கா சிறப்பாக பந்து வீசினார். மேலும் விராட் கோலி மற்றும் கில் ஆகியோர் கொடுத்த வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டு விட்டோம். ஒருவேளை அவற்றை பிடித்திருந்தால் போட்டி வேற மாதிரியாக இருந்திருக்கும். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் நன்றாக பந்து வீசினார்கள். மேலும் முதல் 6 ஓவர்களிலும் நன்றாக பந்து வீசினர். எங்களுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் இருக்கிறது. அவற்றில் வலிமையோடு கலந்து கொண்டு வெற்றி பெறுவோம்” எனக் கூறி முடித்தார்.
இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் மீதி இருக்கும் இரண்டு ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெறுவதோடு பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தோல்வியடைய வேண்டும். மேலும் இலங்கை அணியும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் மீதி இருக்கும் போட்டிகளை வெற்றி பெற வேண்டும்.

