இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் நிதீஷ்குமார் ரெட்டியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று டி20 தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
2024 ஆம் வருட டி20 உலகக் கோப்பை வெற்றியை தொடர்ந்து இந்தியா அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். இதனைத் தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது இரண்டாவது போட்டியில் சிறப்பான சதம் அடித்தார்.
தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுக வீரர் நிதிஷ்குமார் தனது இரண்டாவது போட்டியில் 33 பந்துகளில் சிறப்பாக விளையாடி 74 ரன்கள் எடுத்ததோடு பந்து வீச்சிலும் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இவ்வாறான இளம் வீரர்களின் வருகை இந்திய டி20 அணியை வலுப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்திய அணியின் இளம் வீரர்கள் டி20 போட்டிகளில் சமரசம் செய்து கொள்ளாமல் அதிரடியாகவும் விளையாடி வருகின்றனர்.
இதனால் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா அணி பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்து இருக்கிறது. உலகக்கோப்பை வெற்றியை தொடர்ந்து நடைபெற்ற டி20 போட்டிகளில் 9 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அபிஷேக் ஷர்மா மற்றும் நிதீஷ் குமார் போன்ற இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உதவி இருக்கிறார் எனக் கூறிய பாசித் அலி அவருக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நன்றி சொல்ல தவறினால் அது சரியாக இருக்காது என்று தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக யூடியூப் சேனலில் பேசி இருக்கும் அவர் “நிதீஷ் குமார் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இரண்டு வீரர்களின் வளர்ச்சியில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறப்பான பங்காற்றி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களின் வளர்ச்சிக்கு பாட் கம்மின்ஸ் பெயரை நாம் குறிப்பிட்டு ஆக வேண்டும். அவரது பெயரை நாம் கூற தவறினால் அது மிகப்பெரிய தவறாக இருக்கும்” என தெரிவித்திருக்கிறார். 2024 ஆம் வருட ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்த அணி ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டது. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தாலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா ஆஸ்திரேலியா அணியின் ட்ராவஸ் ஹெட்டுடன் இணைந்து அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும் நான்காவது வீரராக களம் இறங்கிய நிதீஷ் குமார் சிறப்பாக விளையாடினார். மேலும் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த 2 வீரர்களுக்கும் அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கி வந்தார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து உலகக் கோப்பைக்குப் பின் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் ஷர்மா மற்றும் நிதீஷ் குமார் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் நிதீஷ் குமார் காயம் காரணமாக அந்த தொடரில் பங்கேற்க முடியவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் நிதீஷ் குமார் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்த 2 வீரர்களுக்கும் தனது ஆதரவை வழங்கி அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுத்து சிறந்த வீரர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் உதவி இருக்கிறார். அதனால் அவருக்கு நன்றி சொல்வது அவசியம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.

