இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி இந்தியாவின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் முதலில் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி இந்த முடிவை எடுத்தது.
இந்திய அணி குறிப்பாக இந்த போட்டியில் மூன்று பேகப்பந்துவீச்சாளர்கள் உடன் களம் இறங்கியது. சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை குல்தீப் மற்றும் சாகல் ஆகியோரை எடுக்காமல் அக்சார் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை வைத்தே களமிறங்கியது. இதன்படி அயர்லாந்து அணியில் இன்னிங்சை பால் ஸ்டெர்லிங் மற்றும் பால்பிரின் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
ஸ்டெர்லிங் ஐந்து பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆறாவது பந்தில் தூக்கி அடிக்க முயற்சித்து அர்ஸ்தீப் சிங்கின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக நின்று வந்ததால் அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறினார்கள். மேலும் பால்பெரின் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் அர்ஸ்தீப் சிங்கின் பந்துவீச்சிலேயே அவரும் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இந்த இரண்டு விக்கெட்டுகளும் ஒரே ஓவரில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு களம் இறங்கிய விக்கெட் கீப்பர் டக்கர் 10 ரன்களில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கேம்பர் 12 ரன்கள் குவித்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சிலேயே அவரும் வெளியேறினார்.
பின்னர் டாக்ரேல் மூன்று ரன்கள் வெளியேற, மார்க் அடைரும் மூன்று ரன்களில் வெளியேறினார். இவர்களில் டிலானி அதிகபட்சமாக 14 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 26 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது.
இந்தப் போட்டியில் குறிப்பாக ஏழு பேட்ஸ்மேன்கள் ஐந்து ரன்கள் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் 27 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது. இந்திய அணி தற்போது இரண்டு ஓவர்களில் 11 ரன்கள் குவித்த நிலையில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 8 ரன்களும் விராட் கோலி ஒரு ரன்னும் எடுத்து களத்தில் இருக்கிறார்கள்.

