நேற்று டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி பாகிஸ்தானை வெல்லும் நிலையில் இருந்து 19 ஆவது ஓவரில் போட்டியை தோற்றுவிட்டது. இந்த நிலையில் அந்த அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் பால் வான் மீக்கரன் இந்த போட்டியில் தாங்கள்தான் தோற்று விட்டோம் பாகிஸ்தான் வெல்லவில்லை என பல அதிரடியான கருத்துக்களை கூறி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நாங்கள் நேற்று நினைத்த அளவுக்கு ரன்களை அடிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் சிறப்பாக பேட்டிங்கை துவங்கிய போதும் நாங்கள் விட்டு தராமல் போராடியது எங்களுடைய குணத்தையும் கலாச்சாரத்தையும் காட்டியது. இதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அதே சமயத்தில் நேற்று வெல்ல வேண்டிய போட்டியை நாங்கள்தான் தோற்று விட்டோம். எங்களை பாகிஸ்தான் வெல்லவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்”
“நேற்று அந்த கேட்ச் வாய்ப்பை நாங்கள் இழந்த காரணத்தினால்தான் போட்டியை தோற்று விட்டோம் என கிரிக்கெட்டில் புத்திசாலித்தனம் இருக்கும் யாருக்குமே தெரியும். அந்த கேட்ச் வாய்ப்பை பிடித்திருந்தால் நேற்று பாகிஸ்தானை உடனே வீட்டுக்கு அனுப்பி இருக்க முடியும். எங்களால் அதைச் செய்ய முடியாமல் போய்விட்டது அவமானம். ஆனாலும் அதுதான் நிலைமை. இறுதியில் நாங்கள் எங்களிடமே தோல்வி அடைந்து விட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

