ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
இதற்குப் பிறகு இன்னொரு பயிற்சி போட்டி முடிந்த உடன் தனது முதல் போட்டியாக ஜூன் 5ஆம் தேதி நியூயார்க்கில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அனுபவம் இளமையோடு கலந்த அணியாக அனைத்திலும் சம பலத்துடன் விளங்குகிறது.
இந்தத் தொடரில் இந்திய அணி எப்படியாவது டி20 உலக கோப்பையை வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. ஏனென்றால் 2007ஆம் ஆண்டை தவிர அதற்குப் பிறகு 17 வருடங்கள் ஆகியும் டி20 உலகக் கோப்பையை வெல்லாததால் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்த உலகக்கோப்பையில் தமக்கு இடம் கிடைக்காததால் தாம் உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக் தெரிவித்துள்ளார். இந்தியா தோற்றாலும் அதில் எனக்கு கவலை இல்லை என்றும் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து ரியான் பராக் விரிவாக கூறும்பொழுது
” செமி பைனல் விளையாடப் போகும் டாப் 4 அணிகள் குறித்து கேட்டால் நான் ஒரு தலை பட்சமாக இருப்பேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் உலகக் கோப்பையில் விளையாடியிருந்தால் டாப் நான்கு அணிகள் குறித்து யோசிப்பேன். ஆனால் நான் உலக கோப்பையில் இடம்பெறாததால் வரும் போட்டிகளை நான் பார்க்கப் போவதில்லை.
கடைசியாக யார் உலகக் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி. நான் அணியில் விளையாடினால் ஒருவேளை டாப் 4 அணிகள் குறித்து யோசிப்பேன். ஏதேனும் ஒரு தருணத்தில் நீங்கள் என்னை இந்திய அணிக்காக எடுப்பீர்கள் அல்லவா? அதனால் நான் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவேன். ஆனால் அது எப்போது என்பது குறித்து நான் கவலைப்பட போவதில்லை” என்று கூறி இருக்கிறார்.
ரியான் பராக்கின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது. இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் கில் உலகக் கோப்பையில் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் இந்தியா வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை எனவும், கே எல் ராகுல் நான் உலகக் கோப்பையில் இல்லாவிட்டாலும் வீட்டிலிருந்தபடியே இந்தி அணிக்கு ஆதரவளிப்பேன் என்றும் கூறியிருக்கின்றனர். சர்வதேச வீரர்களே இப்படி கருத்து தெரிவிக்கும் போது ஐபிஎல் மட்டும் விளையாடி வரும் ஒரு இளம் வீரர் இவ்வாறு பேசி இருப்பது ரசிகர்களுடைய கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.

