இந்த வருட தொடக்கம் முதலே இந்திய அணி தொடர்ச்சியான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தது. ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா விளையாடியது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
இதன் பிறகு ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் பிறகு ஜூன் மாதம் டி20 உலக கோப்பை போட்டிகளுக்காக இந்திய அணி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. உலகக்கோப்பை வெற்றியை தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே சென்று 5 டி20 போட்டிகளில் விளையாடியது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இதில் டி20 போட்டிகளை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா ஒரு நாள் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பிஸியாக இருக்கும் இந்திய அணிக்கு தற்போது மிகப்பெரிய விடுப்பு கிடைத்திருக்கிறது.
இலங்கை தொடருக்குப் பிறகு இந்திய அணி தனது அடுத்த போட்டி தொடரை செப்டம்பர் மாதம் விளையாட இருக்கிறது. எப்போதும் தொடர்ச்சியான போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு தற்போது 43 நாட்கள் விடுமுறை கிடைத்திருக்கிறது. இலங்கை தொடருக்குப் பிறகு இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.
இந்த சுற்று பயணத்தின் போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான முதல் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை கான்பூரில் வைத்து நடைபெற உள்ளது.
இந்தியா, இலங்கை சுற்றுப்பயணத்தின் போது தனது கடைசி ஒரு நாள் போட்டியை ஆகஸ்ட் 7ஆம் தேதி விளையாடியது. இதனைத் தொடர்ந்து 43 நாட்கள் ஓய்விற்குப் பிறகு செப்டம்பர் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணியை டெஸ்ட் போட்டியில் சந்திக்க இருக்கிறது. இந்த ஓய்விற்குப் பிறகு இந்திய அணிக்கு தொடர்ச்சியாக போட்டிகள் இருக்கின்றன. பங்களாதேஷ் அணியை தொடர்ந்து நியூசிலாந்து அணி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
இந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடருக்கான முதல் போட்டி வருகின்ற அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூரில் தொடங்க இருக்கிறது. நவம்பர் 1 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் நியூசிலாந்து அணியின் சுற்றுப்பயணம் முடிவடைகிறது. இதன் பிறகு தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்யும் இந்தியா அங்கு 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது.
இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பிரிஸ்பேனில் வைத்து தொடங்குகிறது. இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ஜனவரி 3 2025 அன்று சிட்னியில் தொடங்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் முடிவடைகிறது. இதன் பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

