தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி அடுத்ததாக சூப்பர் 8 சுற்றில் வருகிற 20-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது.
பொதுவாக வெஸ்ட் இண்டீஸ் ஆடுகலங்கள் மெதுவாகவும், சுழலுக்கு நன்கு திரும்பும் வகையிலும் இருப்பதால் சூரியகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்கள் இங்கு விளையாடுவது கடினம். இங்கு தரமான பேட்டிங் நுணுக்கம் கொண்ட வீரர்கள் மட்டுமே விளையாடுவதற்கு ஓரளவு எளிதாக இருக்கும்.
ஏனென்றால் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடுகளம் மெதுவாக இருந்ததால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சூரியகுமார் யாதவின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் பலரும் வெளியேறிய நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பாக விளையாட வேண்டிய சூரியகுமார் பேட்டிங்கில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் அதிக பந்துகளை வீணடித்து குறைவான ரன்களில் வெளியேறினார்.
அப்போது அவரது ஆட்டம் பெரிதாக விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் மிகத் திறமையான வீரர் என்பதால் அவர் திரும்பவும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அமெரிக்காவில் இந்திய அணி வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் மெதுவாக இருப்பதால் இந்திய அணி அதற்கு தகுந்தவாறு அணியை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சூரியகுமார் யாதவ் இது குறித்து கூறும் பொழுது “பொதுவாக ஆடுகளம் மெதுவாக இருக்கும் போது ஒருவர் உங்களை நன்றாக ரீட் செய்யும் போது உங்களால் அதிக சக்தி கொண்டு பந்தை அடித்து விளையாட முடியாது. இந்த நேரத்தில் அறிவை பயன்படுத்தி அதற்கு தகுந்தவாறு விளையாட வேண்டியது மிகவும் அவசியம். அணியின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அப்போது விளையாட வேண்டும்.
அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்களிடம் இது குறித்து விவாதித்துவிட்டு, வழக்கமான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாமல் அணிக்கு என்ன தேவையோ அப்போது அதற்குத் தகுந்தவாறு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் அமெரிக்காவில் மகிழ்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூற முடியாது. நாங்கள் முதல்முறையாக அங்கு விளையாடியதால் அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு எங்களை மாற்றிக் கொள்ள சற்று நேரம் தேவைப்பட்டது.
இதையும் படிங்க:கேப்டன் பதவியில் இருந்து விலகல்.. வில்லியம்சன் செய்த மற்றொரு காரியம்.. வருத்தத்தில் ரசிகர்கள்
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் எங்களுக்கு ஏற்கனவே பழகிப்போனது. இதனால் சூழ்நிலை குறித்து நாங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். விக்கெட் விரைவாக விழுந்தால் நான் எனது ஆட்டத்திறனை மாற்றுவேன் என்று கூற முடியாது.ஸ்கோர் போர்டில் அணிக்கு என்ன தேவையோ அதற்கு தகுந்தவாறு எனது ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். நாங்கள் ஒருவருக்கொருவர் பாசிட்டிவ் ஆக ஆட்டத்தை எடுத்துச் செல்ல முயற்சிக்கிறோம். விக்கெட் விழும் பொழுது, எங்கள் பாணியிலேயே விளையாட அணி நிர்வாகம் விட்டுவிடும்” என்று கூறி இருக்கிறார்.

