இந்தியா கிரிக்கெட் அணியில் தற்போது மிடில் வரிசையில் களமிறங்கி மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து இந்திய அணியை மீட்டு எடுத்தார்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக தனது கஷ்ட காலங்களில் யாரும் உதவ முன் வரவில்லை என்று சில உணர்ச்சிகள் நிறைந்த கருத்துக்களை பேசி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வாய்ப்பு பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர் அதற்குப் பிறகு நடைபெற்று வரும் ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக இடம் பிடித்து மிடில் வரிசையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விரைவாக மூன்று விக்கெட்டுகளை இழந்த போது அக்சார் பட்டேலுடன் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி இந்திய அணியை மீட்டெடுத்தார்.
இந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் போட்டிக்குப் பிறகு கூறிய போது ” ஒரு தனிநபராக நான் இன்னொருவரை சார்ந்து இருப்பதை விட என்னை நானே நம்பி பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களை மட்டுமே நீங்கள் முழுதாக நம்ப முடியும். உங்களுடைய கடினமான காலகட்டங்களில் யாரும் பெரிதாக உதவ முன் வர மாட்டார்கள். அப்படி உதவும் நபர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள்.
அவர்களைத்தான் நீங்கள் மிக நெருக்கமாக உணருவீர்கள். இந்த காரணத்தால் தான் நான் என்னை எப்போதும் ஆதரிப்பேன் எனது உள் உணர்வை ஆதரிக்கிறேன். நான் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சொல்கிறேன். கடந்த ஒன்றரை வருடங்களாக எனக்கு நடந்த விஷயங்கள் தற்போதைய என் வாழ்க்கைக்கு மிகவும் உதவுகிறது. அதோடு நான் எனது பேட்டிங் டெக்னிக்கில் வேலை செய்து இருக்கிறேன். நாம் எப்போதுமே நமது நிகழ்காலத்தில் இருக்க வேண்டும், கடந்த கால எண்ணங்கள் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க:ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் தரம்.. ஐசிசி தொடரில் மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடுகிறோம்.. வார்னிங் கொடுத்த ரோகித் சர்மா
நேற்று நான் பேட்டிங் செய்ய வந்த போது ஆடுகளம் மெதுவாக இருந்தது. எனவே பொறுமையாக விளையாடி ரன்கள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எனக்கு அக்சார் பட்டேல் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தார். நானும் அவரும் 100 ரன்கள் வரை நின்று விளையாடி இருப்போம் என்று நினைக்கிறேன். அதற்குப் பின்னர் பௌண்டரிகள் வர ஆரம்பிக்க, ஆட்டம் எங்கள் பக்கம் வந்தது!” என்று ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

