இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் குல்தீப் யாதவ். ஜாம்பவான் வீரரான அஸ்வின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னராக குல்தீப் யாதவ் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரிலும் கூட குல்தீப் யாதவ் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இதனால் குல்தீப் யாதவின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
குல்தீப் யாதவிற்கு நிச்சயதார்த்தம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்காக இந்திய அணி வீரர்கள் விரைவில் புறப்பட இருக்கிறார்கள். இந்த நிலையில் குல்தீப் யாதவ்-க்கு தனது பள்ளி தோழியுடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.
லக்னோவைச் சேர்ந்தவர் வன்ஷிகா. சிறுவயது தோழியான அவருடன், கடந்த சில ஆண்டுகளாக குல்தீப் யாதவ் காதல் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் நட்புடன் பழகிய இருவரும், பின் காதலில் இணைந்துள்ளனர். வன்ஷிகா எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குல்தீப் யாதவ் – வன்ஷிகா இடையில் நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது.
திருமணம் எப்போது?
இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான ரிங்கு சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இவர்களின் திருமண தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. 30 வயதாகும் குல்தீப் யாதவ் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்யும் முடிவுல் இருக்கிறார். இதனால் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
ஏற்கனவே இந்திய அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங்கிற்கு நாடாளுமன்ற எம்பியான பிரியா சரோஜ் உடன் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. ஜூன் 8ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்க உள்ள நிலையில், இந்திய அணியின் வீரர்களுக்கு இது கல்யாண சீசன் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

