இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுத்து வரும் நிலையில் பும்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்குப் பிடித்த கேப்டன் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டனாக பதவி வகித்தார். அதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் ஏதேனும் ஒரு வடிவத்திற்கு கேப்டனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கியமான சர்வதேச தொடர்களில் அவரது தேவை இந்திய அணிக்கு இருப்பதால் அவரது முக்கியத்துவம் கருதி கேப்டன் குறித்த முடிவு எடுக்கப்படவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா முதன்முதலில் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். ரோகித் சர்மா இவரது திறமையை நன்கு அறிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் அணிக்கு கொண்டுவரப்பட்டார். பிறகு மகேந்திர சிங் தோனியின் கீழ் விளையாடி நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டார். மேலும் தோனிக்குப் பிறகு விராட் கோலி கேப்டன் ஆக வர, அவருக்கு கீழும் நிறைய திறமைகளை வளர்த்துக் கொண்டார்.
தற்போது டி20 தொடரில் ரோஹித் சர்மாவின் கீழ் விளையாடி உலகக் கோப்பையை வென்று தனது முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கும் நிலையில், தனக்கு பிடித்த கேப்டன் குறித்து வெளிப்படையான பதில் ஒன்றை கூறி இருக்கிறார். மேலும் ரோகித் சர்மாவுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன் எனவும் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “என்னை பொருத்தவரை எனக்கு பிடித்த கேப்டனாக எப்போதும் நானே இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் சில போட்டிகளில் கேப்டன் ஆகவும் செயல்பட்டு இருக்கிறேன். வெளிப்படையாக சிறந்த கேப்டன்கள் இருந்தாலும், என்னையே நான் சிறந்த கேப்டன் என்று கூறிக்கொள்ள போகிறேன். ரோஹித் சர்மாவின் கீழ் நான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.
அவர் எப்படி கேப்டனாக மாறினார்? தன் தவறுகளில் இருந்து அவர் எப்படி தன்னை திருத்திக் கொண்டார் என்பவற்றையெல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அது மட்டுமல்லாமல் அவரின் கீழ் விளையாடிய அனைவரின் கருத்துக்களுக்கும் இடம் கொடுத்து அதில் தேவையானவற்றையும் எடுத்துக் கொள்வார். நான் ரோஹித் சர்மாவின் தலைமையில் விளையாடியதற்கு நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க:4 ஐபிஎல் அணிகள் ராகுல் டிராவிட்டை அழைப்பு.. எந்த அணிக்கு பயிற்சியாளராக செல்லப் போகிறார்?
ரோஹித் சர்மாவை பொறுத்தவரை சிறிய வீரர், பெரிய வீரர் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாரையும் ஒரே மாதிரி எப்போதும் நடத்துவார். இவர் தன் அணி இல்லை, அவர் தன் அணி இல்லை என்று எவரையும் பிரித்துப் பார்க்க மாட்டார். அனைவருக்கும் சமமாக மதிப்பளித்து ஒருங்கிணைத்துச் செல்வார்” என்று கூறியிருக்கிறார்.

