இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது சுற்று போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வி குறித்து பேசி உள்ள இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் “இந்த போட்டி எங்களுக்கு பந்துவீச்சில் எல்லா நேரத்திலும் கையில் தான் இருந்தது. நாங்கள் பவர் பிளேவில் அவர்களின் முக்கிய மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினோம். அவர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக விளையாடினார்கள். இருந்த போதிலும் கூட நாங்கள் அவர்களை இறுதி கட்ட ஓவர்களில் மடக்கி போட்டியை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்தோம். பும்ரா மற்றும் அர்ஸ்தீப் இருவரும் மிக முக்கியமான கூட்டணி. அவர்கள் எங்களுக்கு சிறந்த பந்துவீச்சை இந்த போட்டியில் வெளிப்படுத்தினார்கள்”
“நீங்கள் இந்த வடிவத்தில் ஒரு போட்டியை பவர் பிளேவில் வெல்லவே முடியாது. அதே சமயத்தில் பவர் பிளேவில் ஒரு போட்டியை உங்களால் தோற்க முடியும். நாங்கள் பவர் பிளேவில் அதிக விக்கெட் கொடுத்ததுதான் மேற்கொண்டு அதிரடியாக விளையாட முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது. இதனால்தான் 187 என்ற ரன்னை துரத்த முடியாமல் தோல்வி ஏற்பட்டது. நாங்கள் அடுத்த போட்டியில் வலிமையாக திரும்பி வந்து வெல்வோம்” என்று கூறியிருக்கிறார்.

