இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
கேப்டன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர்.
இன்று நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டி20 உலக கோப்பைக்கு பிறகு சாம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் சிவம்தூபே ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றனர். பேட்டிங் தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு எட்டு ஓவர்களில் 67 ரன்கள் குவித்தது.
27 பந்துகளில் 36 ரன்கள் குவித்த நிலையில் ஜெய்ஸ்வால் வெளியேற, கேப்டன் கில் இந்த முறை நிதானமாக விளையாடினார். அதற்குப் பிறகு மூன்றாவது வரிசையில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 10 ரன்னில் வெளியேறினாலும், மிடில் வரிசையில் களமிறங்கிய ருத்ராஜ் 28 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 49 ரன்கள் குவித்தார். மறுமுனையில் கில் 49 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் என 66 ரன்கள் குவிக்க 20 ஓவர்களில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.
ஜிம்பாப்வே அணித்தரப்பில் ராசா மற்றும் முஜர்பானி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். அதற்குப் பின்னர் பேட்டிங் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 19 ரன்களுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அதற்குப் பின்னர் களமிறங்கிய கேப்டன் ராசா 15 ரன்களில் ஏமாற்றினார். அதற்குப் பிறகு மேயர்ஸ் மற்றும் மதான்தி ஜோடி 57 பந்துகளில் 77 ரன்கள் குவித்தது.
அதற்குப் பின்னர் மதாந்தி 37 ரன்களில் வெளியேற, மையர்ஸ் 65 ரன்கள் குறித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இந்திய அணித் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகள் கைப்பற்றினார். இவரது பந்துவீச்சு ஆட்டத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர்.. முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.. விரைவில் வெளியாக உள்ள தகவல்
இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஏற்கனவே இரண்டாவது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, தற்போது மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

