இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 587 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 269 ரன்களை விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 ரன்களை குவித்தது.
இதன்பின் 180 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 427 ரன்களை விளாசி டிக்ளேர் செய்தது. 4வது நாளின் கடைசி செஷனில் இந்திய அணி டிக்ளேர் செய்ததால், இங்கிலாந்து தரப்பில் கராலி – டக்கெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சிராஜ் வீசிய பந்தில் கிராலி டக் அவுட்டாகி வெளியேறினார்.
5வது நாள் ஆட்டம்
தொடர்ந்து ஆகாஷ் தீப் பந்தில் அதிரடியாக ஆடிய பென் டக்க்ட் 25 ரன்களில் போல்டாகி வெளியேற, கடைசி நேரத்தில் ஜோ ரூட் 6 ரன்களில் போல்டாகினார். இதனால் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெல்வதற்கு 7 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக இருந்தது.
இந்த நிலையில் 5வது நாள் ஆட்டத்திற்கு முன்பாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பின் ஆட்டம் தொடங்கியது. இம்முறை சிராஜ் அல்லாமல் பிரசித் கிருஷ்ணா அட்டாக்கை தொடங்கினார். ஆட்டம் தொடங்கிய 4வது ஓவரிலேயே போப் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த 2 ஓவர்களில் ஹாரி ப்ரூக்கும் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய சாதனை
இதன்பின் கேப்டன் ஸ்டோக்ஸ் – ஜேமி ஸ்மித் இணை பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் இருவரையும் வீழ்த்த வேகப்பந்துவீச்சாளர்கள் திணற, பின் ஜடேஜா அட்டாக்கில் வந்தார். உணவு இடைவேளைக்கு முன் ஒரேயொரு ஓவர் மட்டுமே வீச வேண்டியது இருந்த போது, திடீரென வாஷிங்டன் சுந்தர் கையில் சுப்மன் கில் பந்தை கொடுத்தார். அந்த ஓவரின் 3வது பந்திலேயே பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலமாக இந்திய அணியின் கைகள் ஓங்கியது. இதன்பின் 2வது செஷனில் இந்திய அணி ரன்கள் செல்வதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அட்டாக்கிங் ஃபீல்டிங் அமைக்கப்பட்டது. கிறிஸ் வோக்ஸ் 7 ரன்களிலும், ஜேமி ஸ்மித் 88 ரன்களிலும், ஜோஷ் டங்க் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியாக பிரைடன் கார்ஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலமாக இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக பவுலிங் செய்த ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலமாக எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி முதல்முறையாக வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கேப்டனாக சுப்மன் கில் முதல் வெற்றியை பெற்றுள்ளார்.

