தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. கடந்த 27 வருடங்களாக இந்தியாவிடம் ஒரு நாள் போட்டி தொடரை வெல்ல முடியாமல் தவித்து வந்த இலங்கை அணிக்கு தற்போது தொடரை கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஒரு நாள் போட்டிகள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா இந்தத் தொடரை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் இருந்தே இந்தியா பெரிய தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்கும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்வதோடு இலங்கை அணிக்கு எதிராக 27 வருடங்களாக கட்டிக் காத்து வரும் ஆதிக்கத்தையும் நிலைநாட்ட இந்தியா முயற்சி செய்யும்.
நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் மிடில் ஆர்டர் சரிவை சந்தித்தது . அனுபவ வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க தவறிவிட்டனர். மேலும் இடது கை ஆல்ரவுண்டர் சிவம் துபே பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் சரியாக செயல்படவில்லை. இதனால் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்திய அணியில் சிவம் துபேவிற்கு பதிலாக ரியான் பராக் களம் இறக்கப்படலாம் என்று இந்திய அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அஸ்ஸாம் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பந்தி வீச்சில் சிறப்பாக செயல்பட்டார். முதல் டி20 போட்டியில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது கில்லுடன் இணைந்து டேட்டிங்கிலும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார் பராக். இதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரியான் பராக் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படுவார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் செய்தி நிலவுகிறது. மேலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் விளையாட இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
ரிஷப் பண்ட் காயம் அடைந்த பிறகு இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் ராகுல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 2023 ஆம் வருட உலகக் கோப்பையிலும் அவர் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செயல்பட்டார். எனினும் தற்போது இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களம் இறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
பந்துவீச்சை பொறுத்தவரை நாளைய போட்டியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:
ரோகித் சர்மா(கேப்டன்)
சுப்மன் கில்
விராட் கோலி
ஸ்ரேயாஸ் ஐயர்
ரிஷப் பண்ட்/ கே.எல் ராகுல்(விக்கெட் கீப்பர்)
ரியான் பராக்/ சிவம் துபே
அக்ஷர் பட்டேல்
வாஷிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
முகமது சிராஜ்
அர்ஷ்தீப் சிங்

