இந்தியா மற்றும் இலங்கை அணி களுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இந்த ஒரு நாள் போட்டி தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 27 ஆண்டுகளாக இந்திய அணி இலங்கைக்கு எதிராக செலுத்தி வந்த ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவரில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதோடு தொடரையும் இழந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் துணித் வெல்லலாகே சிறப்பாக பந்துவீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இந்த வெற்றி சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அணியின் நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர் சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி தற்போது பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றி இலங்கை அணியின் வீரர்களுக்கு புத்துணர்ச்சியையும் புதிய நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
இந்தியாவிற்கு எதிரான தொடரை கைப்பற்றிய பின்னர் பேட்டியளித்த இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷனா இந்த வெற்றி தங்கள் அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது ஏமாற்றத்தை அளித்ததாக குறிப்பிட்ட அவர் அந்தத் தோல்வியை உத்வேகமாக எடுத்துக்கொண்டு தங்கள் அணி ஒரு நாள் போட்டித் தொடரில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர் இறுதிப்போட்டியில் விளையாடியது பெருமை மிகுந்த தருணம் எனவும் குறிப்பிட்டார். மேலும் இந்திய அணியினர் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமான சிறிய ஆடுகளங்களில் விளையாடி பழக்கப்பட்டவர்கள். அதனால் சுழற்சிக்கு சாதகமான பிரேமதாச மைதானத்தில் அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று கணித்தோம்.
இந்த ஒரு நாள் போட்டி தொடரும் அதுபோலவே அமைந்தது. எங்கள் அணியின் பலம் சுழற் பந்துவீச்சு. அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். மேலும் எங்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டி நடைபெறும் ஆடுகளிலும் பந்துகள் திரும்பும் என்பதால் இது போன்ற பிச்சில் எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என தெரிவித்தார். இந்தப் போட்டியில் நாங்கள் விளையாடும் போது ஆடுகளம் முதல் இரண்டு போட்டிகளை விட பேட்டிங்க்கு சாதகமாக இருந்தது.
இதன் காரணமாக அதிக அளவில் நல்ல பந்துகளை வீச வேண்டும் என்று முடிவு செய்தோம். இந்திய அணி பேட்டிங் ஆட வந்தபோது ரோஹித் சர்மா என்னுடைய பந்து வீச்சிற்க்கு எதிராக அதிரடியாக ஆடினார். ஆனால் அசித்தா பெர்னாண்டோ சிறப்பாக பந்துவீசி சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து வெல்லலாகே மற்றும் வாண்டார்சே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். நான் அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீச வேண்டும் என்று நினைத்தேன்.
இந்தத் தொடரில் அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். முதல் போட்டியில் ஹசரங்கா சிறப்பாக செயல்பட்டார். இரண்டாவது போட்டியில் அகிலா தனஞ்செயா ரன்களை விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக பந்து வீசினார். மேலும் ஜெஃப்ரி வாண்டார்சே அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் வெல்லலாகே சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட் கைப்பற்றினார். இந்தத் தொடர் வெற்றி நாங்கள் அணியாக ஒன்றிணைந்து செயல்பட்டதற்கான ஒரு வெற்றி. இந்த அணியில் விளையாடுவது உத்வேகமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார் மகேஷ் தீக்ஷனா.

