இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரின் முதல் போட்டி மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
குவாலியர் நகரில் 14 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதல் சர்வதேச போட்டியில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய பங்களாதேஷ் அணியின் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 4 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரரான பர்வேஸ் உசேன் இமோன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ஆட்டம் இழந்தார்.
இவர்கள் இருவரது விக்கெட்டையும் அர்ஷதீப் சிங் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் நஜ்முல் உசேன் சாந்தோ மற்றும் தவ்ஹீத் ஹிருதாய் ஆகியோர் பங்களாதேஷ் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். எனினும் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹிருதாய், வருண் சக்கரவர்த்தி சுழலில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய அனுபவ வீரர் மஹ்முதுல்லாஹ், அறிமுக வீரர் மாயாங் யாதவ் வேகத்தில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜாக்கர் அலி 1 சிக்சருடன் 8 ரன் எடுத்திருந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் சாந்தோ, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும் அந்த அணியின் இளம் ஆல் ரவுண்டர் மெகதி ஹசன் மிராஜ் பொறுப்புடன் விளையாடி பங்களாதேஷ் அணி ரன்கள் குவிக்க உதவினார். எனினும் அவருக்கு மறுமுனையில் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஷிதீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும் அறிமுக வீரர் மாயாங் யாதவ். ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக தொடங்கினர். இந்தியாவின் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 7 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ருடன் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். எனினும் அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை கடைப்பிடித்தார்.
இவர் சஞ்சு சாம்சுனுடன் இணைந்து அதிரடியாக விளையாடியதில் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 70 ரன்கள் கடந்தது. அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முஸ்தபிஸுர் ரஹ்மான் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து அறிமுக வீரர் நிதிஷ் குமார் உடன் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணி 11.5 ஓவர்களில் வெற்றி பெற உதவியது.
மிகச் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இவருடன் விளையாடிய அறிமுக வீரர் நிதிஷ்குமார் 15 பந்துகளில் ஒரு சிக்சர் உடன் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக பெவிலியன் திரும்பினார். இவர்களது அதிரடி ஆட்டத்தால் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் முஸ்தபிஸுர் ரஹ்மான் 1 விக்கெட்டும் மெஹதி ஹசன் மிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.

