தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் வலது கை பேட்ஸ்மேனாக இருக்க வேண்டிய அவசியம் உருவாகி இருக்கிறது. இருவருமே இடது கை வீரராக இருக்கின்ற காரணத்தினால் எதிரணிகள் பகுதிநேர ஆப்-ஸ்பின்னரை கொண்டு வருகிறார்கள். மேலும் இந்திய அணி கடந்த நான்கு போட்டிகளாக முதல் ஓவரிலேயே விக்கெட்டையும் இழந்து விடுகிறார்கள். இதன் காரணமாக அடுத்து வருகின்ற பேட்ஸ்மேன்கள் மீது எடுத்ததுமே பெரிய அழுத்தம் உருவாகிவிடுகிறது.
இதனால் மேல் வரிசையில் ஒரு வலதுகை பேட்ஸ்மேன் இருந்தால் எதிரணிகள் நிச்சயமாக பகுதி நேர ஆப்-ஸ்பின்னரை கொண்டு வர மாட்டார்கள். அப்படியே கொண்டு வந்தாலும் விளையாடுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். முதல் ஓவரிலேயே பெரிய சிக்சர்கள் அடிக்க முடியும். எனவே திலக் வர்மாவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை அபிஷேக் ஷர்மா உடன் தொடக்க ஆட்டக்காரராக கொண்டுவர வேண்டிய அவசியம் மிக அதிகமாக தற்போது உருவாகியுள்ளது.
இதுகுறித்து பேசி உள்ள இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் “கடந்த 18 மாதங்களாக எங்களுக்கு சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை வெளியில் வைத்து விட்டு, எதிரணிகள் இப்படியான திட்டத்தை கொண்டு வருகின்ற காரணத்தினால், சஞ்சு சாம்சனை உடனடியாக அணியில் சேர்க்க வேண்டுமா? என்பது குறித்தான பேச்சுவார்த்தையை நாங்கள் ஆரம்பிக்க இருக்கிறோம். அடுத்த இரண்டு போட்டிகளுக்கு முன்பாக எங்கள் அணியில் இதுதான் பெரிய பேசுபொருளாக இருக்கப் போகிறது என்று எனக்கு தெரியும். அமெரிக்கப் போட்டி தவிர அடுத்த நான்கு போட்டிகளில் நாங்கள் முதல் ஓவரில் விக்கெட்டை இழந்திருக்கிறோம். எனவே இது குறித்து நாங்கள் பேசுவோம்” என்று கூறி இருக்கிறார்.

