இலங்கையில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் துவக்க வீரர்களான சுப்மண் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து முதலாவது விக்கெட்க்கு 11 ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா மிகப்பெரிய ஸ்கோர் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11.1 ஓவரின் முதல் பந்தில் இந்தியா தனது முதல் விக்கெட்டை இழந்தது.
இலங்கை அணியின் இளம் ஆல் ரவுண்டர் துணித் வெல்லலாகே வீசிய பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கடந்த போட்டியில் சதம் எடுத்த விராட் கோலி 3 ரன்களிலும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா 53 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற 91 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் இந்தியாவை சரிவில் இருந்து மீட்டனர்.
இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்த ராகுல் 39 ரன்கள் எடுத்து வெல்லலாகே பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ராகுலின் விக்கெட்டை தொடர்ந்து இஷான் கிஷான் 33 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 5 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற 172 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்து தடுமாறியது இந்திய அணி. இதில் சிறப்பாக பந்து வீசிய வெல்லலாகே 40 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இந்திய அணியின் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து பந்திவீச்சாளர்களின் துணையுடன் இந்தியா 200 ரண்களைக் கடக்க உதவிய அக்ஷர் பட்டேல் 36 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து இறுதியாக ஆட்டம் இழந்தார் இதனால் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் வெல்லலாகே 5 விக்கெட்டுகளையும் சரித் அசலங்கா நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தீக்ஷனா ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்தியா தனது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து விக்கெட்களையும் சுழற் பந்துவீச்சாளர்களிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே சரிவை சந்தித்தது. அந்த அணியின் நிசாங்கா, கருணரத்னே மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகியோர் முதல் பத்து ஓவர்களுக்குள் அவுட் ஆகி வெளியேற 25 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை . இதனைத் தொடர்ந்து நான்காவது விக்கெட் இருக்கு ஜோடி சேர்ந்த சதீரா மற்றும் அசலங்கா இருவரும் 43 ரன்கள் சேர்த்த நிலையில் 17 ரன்கள் எடுத்திருந்த சதீரா குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து அசலங்கா 22 ரண்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும் கேப்டன் சனக்கா ஒன்பது ரண்களில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சசிலும் ஆட்டம் இழக்க 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை.
இந்நிலையில் ஏழாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஆல்ரவுண்டர்களான தனஞ்செயா டிசில்வா மற்றும் துணித் வெல்லலாகே இருவரும் இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டதோடு வெற்றியும் பாதைக்கும் அழைத்துச் செல்ல சிறப்பாக ஆடினர். இதனைத் தொடர்ந்து வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த தனஞ்செயா டிசில்வா 41 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஆட வந்த பந்துவீச்சாளர்களான தீக்ஷனா 2 ரன்களிலும் ரஜிதா 1 ரன்னிலும் பத்திரன ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேற இலங்கை அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட துணித் வெல்லலாகே பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாக ஆடி 46 பந்துகளில் 42 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட துணித் வெல்லலாகே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது சூப்பர் 4 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்த பங்களாதேஷ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கின்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் விளையாடும்.

