தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் யார் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெறுவார்கள் என்பதை நிர்ணயிக்கும் போட்டியாக இது அமைந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்தியாவிற்கு துவக்க வீரர்கள் மிகச் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 24 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர் உடன் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரது அதிரடியான ஆட்டத்தால் இந்தியா முதல் 10பவர்களில் 92 ரன்கள் சேர்த்தது.
ரோகித் சர்மாவை தொடர்ந்து 24 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்த கில் அவுட் ஆனார். இதனால் இந்தியா 93 ரன்கள் 2 விக்கெட் இழந்திருந்தது. இந்நிலையில் விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இவர்கள் இருவரும் ஆடுகளத்தின் கடினத் தன்மை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மூன்றாவது விக்கெட் பார்ட்னர்சிப்பாக 134 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 87 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ராகுல் 8 ரன்னிலும் சூரியகுமார் யாதவ் 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 49-வது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். இறுதியில் வந்து அதிரடியாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். விராட் கோலி 121 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடித்து 101 ரன்கள் உடன் நாட் அவுட் ஆக இருந்தார். இந்தியா 50 ஓவர்களில் 326 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்திருந்தது.
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சந்திக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய குயின்டன் டிகாக் ஐந்து ரன்னில் முகமது சிராஜ் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து கேப்டன் பவுமா 11 ரன்னிலும் மார்க்ரம் 9 ரன்னிலும் வாண்டர் டுஷன் 13 ரன்னிலும் கிளாசன் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
அணியை சரிவில் இருந்து மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் 11 ரன்னில் அவுட் ஆக தென்னாப்பிரிக்கா அணியின் நம்பிக்கை சரிந்தது. இவரைத் தொடர்ந்து கேசவ் மகராஜ் ஏழு ரன் எடுத்து அவுட் ஆனார். தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக யான்சன் மட்டும் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரபாடா 6 ரன்னிலும் இங்கிடி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 33 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகமது சமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முகமது சிராஜ் 1 விக்கெட் கைப்பற்றினார். இதனால் இந்தியா தென்னாப்பிரிக்கா அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் எட்டு போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளுடன் முதலிடத்தையும் தக்க வைத்துக் கொண்டது.
தற்போதைய புள்ளிகள் பட்டியலின் நிலவரப்படி போட்டிகளின் முடிவில் இந்தியா உன்னிடத்தில் இருக்கும். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இடம்பெறும். பாகிஸ்தான் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள். நான்காவது இடத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்றன. இதனால் அரை இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் அணிகளுடன் விளையாட வாய்ப்பு இருக்கிறது. மேலும் மற்றொரு அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத வாய்ப்புள்ளது.

