தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற 12 வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகுந்த பரபரப்புகளுக்கு இடையே இந்த போட்டி அகமதாபாத்தில் இன்று மதியம் 2 மணி அளவில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான அப்துல்லா ஷபிக் 20 ரன்களிலும் இமாம் உல்காக் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மிகச் சிறப்பாக ஆடிய பாபர் அசாம் இந்தியாவிற்கு எதிராக முதல் அரை சதம் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து சவுத் ஷகீல் 6 ரன்களிலும் இப்திகார் அகமது 4 ரன்களிலும் வெளியேற பாகிஸ்தான் அணி மிகப் பெரிய சரிவை சந்தித்தது. மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த முகமது ரிஸ்வான் 49 ரன்களில் கிளீன் போல்ட் ஆகி வெளியேற அவரைத் தொடர்ந்து ஆட வந்த சதாப்கான் 2 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்,
பின் வரிசையில் களமிறங்கிய முகமது நவாஸ் 4 ரன்களும் ஹசன் அலி 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதி விக்கெட் ஆக ஹாரிஸ் ரவூப் 2 ரன்களில் அவுட் ஆக பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மிகச் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார். இந்திய அணி துவக்கத்தில் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா, அரை சதம் எடுத்தார். இவருக்கு துணையாக ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாடினார்.
இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையும் படைத்தார். சிறப்பாக விளையாடிய அவர் 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஸ்ரேயாஸ் ஐயர் இந்தப் போட்டியில் அரை சதம் எடுத்ததோடு உலகக் கோப்பை போட்டிகளில் தனது முதல் அரை சதத்தையும் பதிவு செய்தார். இந்திய அணி 30.3 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் 8 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தனது சாதனையை தொடர்கிறது. இந்தப் போட்டியில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்தியாவை தொடர்ந்து நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கின்றன.

