தற்போது நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று நடந்து முடிந்தது. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் இந்திய அணிக்கு அதிரடியான துவக்கத்தையும் அமைத்துக் கொடுத்தார். அதிரடியாக விளையாடியவர் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி கில்லுடன் இணைந்தார். இந்த ஜோடி இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. விராட் கோலி மற்றும் கில் இருவரும் தங்களது அரை சதத்தையும் நிறைவு செய்தனர்.
77 ரன்களில் கில் ஆடிக்கொண்டிருந்த போது தசைப்பிடிப்பு காரணமாக அவரால் தொடர முடியவில்லை. இதனால் ரிட்டையர் ஹர்ட் ஆகி வெளியேறினார் இவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலி உடன் இணைந்தார். இந்த ஜோடியின் ஆட்டத்தில் அனல் பறந்தது. இவர்கள் இருவரும் அதிரடியாக ஆட இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி இன்றைய போட்டியில் தனது ஐம்பதாவது சதத்தை நிறைவு செய்தார் இந்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையையும் முறியடித்தார்.
இவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்த உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 113 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர் உடன் 117 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்துகளில் எட்டு சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் கேஎல் ராகுல் அதிரடியாக 20 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பௌண்டரிகளுடன் 39 ரன்கள் எடுக்க இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு நான் 397 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய இலக்கை நோக்கி தனது பேட்டிங்கை துவங்கியது நியூசிலாந்து. எனினும் அந்த அணியின் துவக்க வீரர்கள் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவரும் 13 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் மற்றும் மிச்சல் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்த நிலையில் சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 73 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் இவரைத் தொடர்ந்து அதே ஓவரில் டாம் லேத்தம் ரன் எதுவும் எடுக்காமல் வீழ்ந்தார் .
முகமது சமீ வீசிய இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு சிறப்பாக விளையாடிய மிச்சல் சதம் எடுத்தார். அவருடன் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து ரன் ரேட் உயர நியூசிலாந்து அணியின் விக்கெட் சரிந்தன. சிறப்பாக ஆடிய டெரில் மிச்சல் 119 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகளுடன் 134 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும் உலகக் கோப்பையில் 52 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உலகக்கோப்பை தொடரிலும் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரை தவிர குல்தீப் யாதவ் முகமது சிராஜ் மற்றும் டிஸ்ட்ரி பும்ரா ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்று இருக்கிறது. நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி அகமதாபாத்தில் விளையாடும்

