2023 ஆம் ஆண்டின் 13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்றுடன் நிறைவுற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது.
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு கில் 4 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து இந்தியாவிற்கு நல்ல ஒரு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் நான்கு ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார்.
இவரைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பாக 67 ரன்கள் சேர்த்து நிலையில் 54 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா ஒன்பது ரன்னில் ஆட்டம் இழந்தார். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய கேஎன் ராகுல் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க இந்தியா தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா அணி. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னிலும் மார்ஸ் 15 ரன்னிலும் ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 47 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்திருந்தது.
எனினும் அதன் பிறகு ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய ட்ராவல்ஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுச்சீன் இருவரும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் மூலம் ஆஸ்திரேலியா அணியை உலகச் சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தனர்.அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக விளையாடிய ஹெட் இந்த உலகக்கோப்பை தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்து 120 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் லபுச்சீன் 110 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறை உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது.
இந்த உலகக்கோப்பை தொடரில் எந்த போட்டியிலும் தோல்வி அடையாமல் இறுதி போட்டிக்கு வந்த இந்தியா முதல்முறையாக 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தனது முதல் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதன் மூலம் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி சதாம் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக்கோப்பை தொடரில் 765 ரன்கள் எடுத்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த உலகக்கோப்பை தொடர் பல கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இந்தத் தொடர் முழுவதும் வீழ்த்த முடியாத அணியாக விளங்கிய இந்தியா உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இன்று இந்திய அணியின் பேட்டிங் வழக்கம் போல் க்ளிக் ஆகவில்லை. கடந்த உலகக் கோப்பைகளில் விளையாடிய வீரர்கள் மட்டுமே இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

