IND vs AUS..27 வருடம்.. மொகாலியில் இந்தியா சாதனை.. பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி No.1 இடம்.!

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியில் வைத்து நடைபெற்றது டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மிச்சல் மார்ஸ் நான்கு ரன்களில் முகமது சமியின் வேகத்தில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

- Advertisement -

இந்நிலையில் வார்னர் 52 ரன்களிலும் ஸ்மித் 41 ரன்களிலும் முறையே ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சமி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து களம்பிறங்கிய லபுசேன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த லபுசேன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார் . ஐந்தாவது விக்கெட்க்கு இங்கில்ஷ் மற்றும் கிரீன் இருவரும் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியா அணியின் ரன் ரேட் உயர காரணமாக இருந்தனர். இவர்களின் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் தொடும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் 31 ரன்கள் எடுத்திருந்த கிரீன் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஸ்டானிஸ் விக்கெட்டை கிளீன் போல்ட் முறையில் வீழ்த்தினார் முஹம்மது ஷமி. மேலும் இவரை தொடர்ந்து ஆட வந்த ஷார்ட் விக்கெட்டை கேட்ச் முறையில் வீழ்த்தியதோடு ஷான் அபாட் விக்கெட்டை கிளீன் போல்ட் முறையில் வீழ்த்தி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது இரண்டாவது ஐந்து விக்கெட் சாதனையை நிகழ்த்தினார் முஹம்மது ஷமி. இதனால் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி 51 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா.ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் .

277 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ருத்ராஜ் மற்றும் கில் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து முதலாவது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ருத்ராஜ் கைக்வாட் விக்கெட்டை ஆடம் ஜாம்பா எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் . ருத்ராஜ் மிகச் சிறப்பாக விளையாடி 10 பவுண்டரிகளுடன் 77 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேற மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 63 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஜாம்பா பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து 18 ரன்களில் இஷான் கிஷான் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி குறுகிய இடைவெளியில் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஐந்தாவது விக்கெட்க்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றிக்கு வழி நடத்தினர். ஒரு நாள் போட்டிகளில் சமீபத்தில் சொதப்பி வந்த சூரியகுமார் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக இந்தியா 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக விளையாடி 63 பந்துகளில் 58 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். மறுமுனையில் ஜடேஜா மூன்று ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. மேலும் 27 வருடங்களுக்கு பிறகு மொஹாலி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது. கடைசியாக இந்தியா 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற டைட்டன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன்பிறகு மொஹாலி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. 27 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்திருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு மொஹாலி மைதானம் இந்தியாவில் ஒரு ராசியான மைதானம் ஆகும். இந்தப் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி மொஹாலியில் ஆடிய 7 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 1996 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக உலகக்கோப்பை அரை இறுதியில் பெற்ற வெற்றி மற்றும் 2006 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பெற்ற வெற்றி ஆகியவையும் அடங்கும். மேலும் இந்த வெற்றியின் மூலம் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி இந்திய அணி ஒருநாள் போட்டி தொடர்களில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles