தற்போது நடைபெற்று வரும் இந்தியா உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே டிராபியில் மும்பை மற்றும் கோவா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோவா பந்துவீச்சாளர்களை மிரள வைத்திருக்கிறார்.
இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று குரூப் சி எலைட் பிரிவில் மும்பை மற்றும் கோவா அணிகள் விளையாடின. இதில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டென்டல்கர் கோவா அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 46 ரன்னில் வெளியேற, அவருக்குப் பிறகு வந்த சர்பராஸ் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வெறும் 75 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 14 இமாலய சிக்ஸர்களை விளாசி தள்ளினார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 209.33 ஆகும். மொத்தமாக அவரது ஸ்கோர் 150 ரன்கள் கடந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 444 ரன்கள் குவித்தது. சர்பராஸ் கான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 75 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அதிரடி பேட்டிங்கை கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

