தற்போது நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா சவுத் ஆப்பிரிக்கா அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 326 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்கை துரத்தி ஆடிய சவுத் ஆப்பிரிக்கா 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து உலகக் கோப்பை லீக் போட்டிகளில் தனது முதல் இடத்தை உறுதி செய்தது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே தொடர்ந்து. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் எந்த அணியாலும் வீழ்த்த முடியாத மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்து இருக்கிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி ஒரு நாள் போட்டி தொடர்களில் தனது 49 வது சதத்தை நிறைவு செய்தார். இந்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையையும் சமன் செய்திருக்கிறார். இந்திய அணிக்காக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 121 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 33 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார். மேலும் இந்த உலக கோப்பையில் சிறப்பாக பந்து வீசி வரும் முகமது சமி 2 விக்கெட் கைப்பற்றினார்.
இந்நிலையில் இந்தப் போட்டியின் முடிவிற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய தென்னாப்பிரிக்க அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவங்களுக்கான பயிற்சியாளர் வால்டர் விஜய் பட வசனத்தை நினைவுபடுத்துவது போல் பேட்டி அளித்திருக்கிறார். தளபதி விஜயின் திருமலை படத்தில் உலகம் ஒரு வட்டம் கீழே இருக்கிறவன் மேல வருவான் மேல இருக்கிறவன் கீழே வருவான் என்ற வசனம் வரும். அதுபோன்று பேசியிருக்கிறார் தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” இந்த விளையாட்டு வினோதமான ஒன்று. ஒவ்வொரு நாளும் நமக்கு புதிய பாடங்களை கற்றுக் கொடுக்கும். புதிய ஆச்சரியங்கள் நமக்காக காத்திருக்கும். அவற்றிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இன்று இந்தியா எங்களை வென்றது போல் நாளை நாங்கள் இந்திய அணியை வெல்லலாம். அது எனக்கு ஆச்சரியத்தையும் கொடுக்காது. அதுதான் இந்த விளையாட்டின் அழகு. இல்லையென்றால் அவர்கள் எங்களுக்கு மீண்டும் ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்தியா மிகவும் வலிமையான ஒரு அணி. அந்த அணியின் வீரர்கள் மிகத் திறமையானவர்கள். அவர்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றதை போல் எங்களுக்கு எதிராகவும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால் இது இப்படியே தொடரும் என்று கூற முடியாது. காலங்கள் மாறும் எங்களுடைய திறமையை நாங்கள் சரியாக செயல்படுத்தினால் எங்கள் அணியாளும் இந்தியாவை வீழ்த்த முடியும். நிச்சயமாக அதையும் செய்து காட்டுவோம். நேற்றைய போட்டியில் துவக்கத்தில் இருந்தே நாங்கள் சரியாக செயல்படவில்லை” என தெரிவித்தார்.
“ஒரு போட்டியில் ஒரு சில வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பதை வைத்து அவர்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களுக்கு இன்றைய நாள் சரியாக இல்லை. ஆனால் நிச்சயமாக மீண்டு வருவார்கள். காலம் எப்போதும் ஒன்று போல இருக்காது. இந்தியா நேற்றைய போட்டியில் எங்களுக்கு செய்ததை அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் இந்தியாவை சந்திக்க நேர்ந்தால் நிச்சயமாக திருப்பிக் கொடுப்போம்” என்று கூறி முடித்திருக்கிறார் வால்டர்.

