இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்த தொடரை எதிர்கொள்கின்றன
முதலாவது ஒரு நாள் போட்டி நாக்பூர் நகரில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்த இந்திய அணியின் துணை கேப்டன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது
காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 38.4 ஓவர்களில் 251 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில் மிகச் சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்தார்.
மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஆகியோரும் அரை சதம் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதல் போட்டியில் தங்களது அணி பெற்ற தோல்வி மிகவும் ஏமாற்றத்தை தருவதாக தெரிவித்தார். மேலும் தங்களது அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்ததாக கூறினார்.
ஆடுகளம் செயல்பட்ட விதத்தை பார்க்கும் போது 40 முதல் 50 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் தங்கள் அணி வெற்றி பெற வாய்ப்பு அமைந்திருக்கும் என அவர் தெரிவித்தார். பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக விளையாடிய நாங்கள் அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியவில்லை எனக் கூறினார். அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பான முறையில் தொடங்கினர். ஆனால் யாரும் நிலைத்து நின்று ஆடாதது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது என தெரிவித்தார்.
மேலும் இந்திய அணி 19 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தபோது போட்டி சமமாக இருந்தது. எனினும் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் போட்டியை இந்திய அணியின் பக்கம் திசை திருப்பியது எனக் கூறினார். ஒரு நாள் போட்டி தொடரில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். மீதி இருக்கின்ற 2 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்ல முயற்சி செய்வோம் என கூறியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர்.

