பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என 2 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்தியா வெற்றி பெற உதவினார். இதனைத் தொடர்ந்து இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார் .
முன்னதாக இந்திய அணியின் பேட்டிங்கின் போது 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய நிலையில் களம் இறங்கிய அஸ்வின், ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து மிகச் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார். அதிரடியாக விளையாடிய அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தையும் பதிவு செய்தார். இவரது பேட்டிங்கால் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் இரண்டாவது இன்னிங்சில் 88 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து நாட்டில் பிறந்திருந்தால் அவரால் தற்போது கிரிக்கெட் விளையாட முடிந்திருக்காது என இங்கிலாந்து நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான மான்டி பனேசர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு விளையாடி இருந்தால் அந்த அணி நிர்வாகம் அஸ்வினின் வயதை கருத்தில் கொண்டு அவரை ஓய்வு பெற கூறி இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து விரிவாக பேசிய மான்டி பனேசர் ” இங்கிலாந்து அணி நிறைய பரிசோதனைகள் செய்ய விரும்புகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து வீரராக இருந்திருந்தால் தற்போது அவரை ஓய்வு பெற அறிவுறுத்தி இருக்கும். மேலும் அவரது இடத்திற்கு இளம் வீரரை சோதனை முயற்சியில் விளையாட வைத்திருக்கும். இங்கிலாந்து கிரிக்கெட் அணி மற்றும் அதன் மேலாண்மை குழு அதிக அளவில் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் ஆகிய இருவரில் யார் சிறந்த ஆப் ஸ்பின்னர் என்ற கேள்விக்கு பதில் அளித்த மான்டி பனேசர் ” தன்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் சிறந்த பந்துவீச்சாளர்” என தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்திய ஆடுகலங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என குறிப்பிட்ட அவர் அஸ்வின் பேட்ஸ்மேன்களின் மனநிலையில் பந்து வீசுவதாகவும் தெரிவித்தார் .
அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் இருப்பதால் ஒரு ஆட்டக்காரர் எவ்வாறான மனநிலையில் இருப்பார் என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தார் போல் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என தெரிவித்திருக்கிறார். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசும் போது சிறப்பான பேட்டிங்கையும் வெளிப்படுத்துகிறார் என பாராட்டி இருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டி முடிவு அடைந்த நிலையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற வெள்ளிக்கிழமை கான்பூர் நகரில் அமைந்துள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நெருங்கி வருவதால் சென்னையில் வெற்றி பெற்ற வலுவான அணியையே இந்தியா களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

