தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டி தொடரில் இன்று நடைபெற இருக்கின்ற போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் அமைந்துள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் இகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
இந்தியா தற்போது விளையாடியிருக்கும் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேற முயற்சி செய்யும். மறுபுறம் இங்கிலாந்து அணி விளையாடி இருக்கும் 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெறும் போட்டியிலும் தோல்வி அடைந்தால் அந்த அணி அரை இறுதி போட்டிகளுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழக்கும். எனவே நிச்சயமாக இந்த போட்டியில் வெற்றி பெற கடும் முயற்சிகள் செய்யும். இதனால் இந்த போட்டியானது பரபரப்பான ஒன்றாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான கேஎல் ராகுல் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது காயம் அடைந்து இந்திய அணியில் இருந்து விலகினார். அறுவை சிகிச்சைக்கு பின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரமான பயிற்சிகளின் மூலம் உடல் தகுதியை நிரூபித்து அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் மீண்டும் களம் இறங்கினார். அந்தப் போட்டியில் சதம் அடித்து மீண்டும் ஃபார்மிற்கு வந்து அவர் தனது சிறப்பான ஃபார்மை உலக கோப்பையிலும் தொடர்ந்து வருகிறார்..
ஆசியக் கோப்பை போட்டிகளை தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இரண்டு அரை சதங்கள் எடுத்த அவர் உலகக்கோப்பை தொடரின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா இரண்டு ரன்கள் மூன்று விக்கெட்டுகள் இழந்திருந்த போது விராட் கோலியுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போட்டியில் 97 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்த அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கேஎல் ராகுல் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் நிருபர் ஒருவர்” இந்த மைதானத்தில் நீங்கள் கடைசியாக விளையாடும் போது உங்களுக்கு காயம் ஏற்பட்டது தற்போது மீண்டும் இந்த மைதானத்திற்கு திரும்பி அனுப்பவும் எப்படி இருக்கிறது.? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ராகுல” இந்த மைதானத்தில் நான் கடைசியாக ஐபிஎல் தொடரில் விளையாடும் போது காயமடைந்தேன். அதன் காரணமாக என்னால் நான்கு முதல் ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது. தற்போது மீண்டும் நல்ல பிட்னஸ் உடன் கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர்” இந்த மைதானத்திற்குள் நேற்று வந்த போது ஐபிஎல் போட்டிகளில் நான் காயமடைந்து வலியால் துடித்தது தான் ஞாபகம் வந்தது. அவற்றை மறக்க நினைக்கிறேன் ஆனால் நீங்கள் அதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறீர்கள். இந்த முறையை அது போல் எதுவும் நடக்காமல் நல்ல ஞாபகங்களையும் இனிமையான நினைவுகளையும் ஏற்படுத்த முயற்சி செய்வேன்” எனக் கூறினார். மேலும் ஒரு வீரர் காயம் அடைந்து அறுவை சிகிச்சைக்கு பின் திரும்பி வருவது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறியவர் அதற்காக கடினமான உழைப்பை கொடுத்திருப்பதாகவும் தற்போது தன்னுடைய ஆட்டம் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கிரிக்கெட்டை பொருத்தவரை ஒரு சில போட்டிகளில் நீங்கள் சதம் அடிப்பீர்கள். அடுத்த போட்டிகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழப்பீர்கள். இந்த சக்சஸ் மற்றும் ஃபெயிலியர் கிரிக்கெட்டில் நடக்கக்கூடிய ஒன்று. இதை எப்படி கையாள வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் ஒரு போட்டியில் காயம் அடைந்து அதன் காரணமாக சில காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து பின்பு உங்களுடைய ஃபிட்னஸ் மற்றும் உடல் தகுதியில் கடினமாக உழைத்து மீண்டும் கிரிக்கெட் ஆடுகளத்திற்கு வருவது ஒரு கடினமான பாதை என கூறி முடித்தார் அவர்.

