சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் கேகேஆர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியை பெற்றது.
கேகேஆர் அணி அடைந்துள்ள இந்த தோல்வியின் காரணமாக, அந்த அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. ஏனென்றால் கேகேஆர் அணி எஞ்சியுள்ள 2 போட்டிகளில் வென்றாலும் கூட 15 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இதனாம் மும்பை, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகளின் வெற்றி, தோல்வியை வைத்தே கேகேஆர் அணியின் பிளே ஆஃப் கனவின் முடிவு தெரியும்.
ரஹானே பேட்டி
நடப்பு சாம்பியனாக களமிறங்கிய கேகேஆர் அணி தொடக்க போட்டிகளில் தடுமாறியதே அந்த அணிக்கு சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த தோல்விக்கு பின் கேகேஆர் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே பேசும் போது, நாம் தலைமை தாங்கிய அணி தோல்வியின் பக்கம் இருக்கும் போது அந்த உணர்வு நன்றாக இருக்காது.
இந்த போட்டியில் கேகேஆர் அணி 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாக நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் எளிதாக 185 முதல் 195 ரன்கள் வரை சேர்க்க முடியும் என்று நினைத்திருந்தேன். இருந்தாலும் இந்த போட்டி சிறந்ததாக அமைந்துள்ளது. வைபவ் அரோரா பந்தில் பிரெவிஸ் 30 ரன்களை விளாசினார். டி20 கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் சகஜம்.
எந்த குறையுமில்லை
அந்த ஓவர், அதேபோல் சில கேட்ச் மிஸ் உள்ளிட்டவற்றை தோல்விக்கு காரணமாக சொல்லலாம். ஆனால் சிஎஸ்கே அணி சிறப்பாக பேட்டிங் ஆடியது. அவர்கள் தயங்காமல் சான்ஸை எடுத்து அட்டாக் செய்தார்கள். பிரெவிஸ் மற்றும் சிவம் துபே இருவரும் சிறப்பாக பங்களித்தார்கள். அதனால் கேகேஆர் அணியை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை.
எங்களின் பவுலர்களும் சிறப்பாக பவுலிங் செய்தார்கள் என்று நம்புகிறேன். இங்கிருந்து பிளே ஆஃப் பற்றிய கணக்கு மிகவும் எளிதானது. அடுத்த 2 போட்டிகளில் 2லும் வெல்ல வேண்டும். அதன்பின் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தெரிவித்தார். கேகேஆர் அணி அடுத்த 2 போட்டிகளில் ஆர்சிபி மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது.

