ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி வலிமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாகவே தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமனம் செய்தது. இதன்பின் மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்து அனைவரையும் வியக்க வைத்தது.
தற்போது பஞ்சாப் அணி ஆடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் 8 போட்டிகளில் பஞ்சாப் அணி 4 போட்டிகளில் வென்றாலே எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். அப்படி முன்னேறினால் 11 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைக்கும்.
அர்ஷ்தீப் சிங் பேட்டி
இந்த சீசனில் பஞ்சாப் அணியின் சீனியர் பவுலராக அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், அவர் ஏற்படுத்தி இருக்கும் தாக்கல் அபரிவிதமாக அமைந்துள்ளது. இதுகுறித்து அர்ஷ்தீப் சிங் பேசும் போது, பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது எனக்குள் சீனியர் பவுலர் என்ற பொறுப்பு உள்ளது.
முதல் ஆண்டுக்கு பின் இந்த உணர்வு எப்போதும் உள்ளது. பஞ்சாப் அணியுடன் 7 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்து வருகிறேன். முதல் ஆண்டு விளையாடி முடித்த பின், எனக்கு மிகப்பெரிய பொறுப்பு அளிக்கப்பட்டதாக நினைக்கிறேன். அந்த பொறுப்புதான் ஒரு வீரராகவும், மனிதராகவும் வளர்ச்சி அடைய உதவியாக அமைந்தது.
மீம்களை நினைத்து பயமில்லை
எனது ரோல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றதற்கும், வளர்ச்சி அடைத்த கட்டத்திற்கு முன்னேறியதற்கும் பஞ்சாப் அணி முக்கிய காரணம். அழுத்தம் நிறைந்த சூழல்களில் சில மோசமாக செயல்பட்டுள்ளேன். சில நேரங்களில் திட்டத்திற்கு ஏற்ப பவுலிங் செய்ய முடியாமல் இருந்துள்ளேன். அதனால் மிகப்பெரிய சிக்கல் வந்திருக்கிறது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்துள்ளது.
சிறிது காலத்திலேயே எனது கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சத்திற்கு சென்றுள்ளேன். அதேபோல் மோசமாக செயல்படும் போது ரசிகர்களால் ட்ரால் செய்யப்பட்டுள்ளேன். அந்த ட்ரால்களை எப்போதும் ஜாலியாகவே எடுத்து கொள்வேன். அந்த மீம்களை பார்த்து சிரிப்பதும் நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார்.

