சிக்ஸ் அடிச்சு வின் பண்ண நினைக்கல.. நான் நினைச்சதே வேற.. வருத்தப்பட்ட காரணத்தைச் சொன்ன கேஎல் ராகுல்.!

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேற்று சேப்பாக்கத்தில் வைத்து மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 199 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 41.2 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா 2 விக்கெட்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 200 ரண்களை நோக்கி களம் இறங்கிய போது 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

ரோகித் சர்மா. இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ரன்கள் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். இதன் பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடியாக 165 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி 116 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இறுதி வரை ஆட்டம் இழக்காமல் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 115 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 42 வது ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டபோது கம்மின்ஸ் வீசிய பந்தை சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். ஆனாலும் பந்து சிக்ஸருக்கு சென்ற போது அவரது முகத்தில் சிறிது சோகம் நிலவியது. அது உலகக்கோப்பை போட்டியில் சதம் எடுக்காமல் போனதால் ஏற்பட்ட சோகம் என கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் தெரிவித்தனர்.

தற்போது அது தொடர்பாக கேஎல் ராகுல் மனம் திறந்து பேசி இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர்” இறுதியில் நான் சதம் எடுக்க 1 பவுண்டரியும் 1 சிக்ஸரும் தேவைப்பட்டது. முதலில் ஒரு பந்தை பவுண்டரிக்கு அடித்து அடுத்த பந்தை சிக்ஸருக்கு அடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக வேகமாக அடித்து விட்டேன்” என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர் ” இந்தப் போட்டியில் சதம் மிஸ் ஆகிவிட்டது என்றாலும் இன்னொரு போட்டியில் அதனை நிறைவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். மூன்று விக்கெட்டுகள் இழந்தபோது ஆடுகளத்திற்குள் வந்தது மிகவும் பரபரப்பாக இருந்தது என்றும் விராட் கோலி தன்னை டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதைப் போன்று சிறிது நேரம் விளையாடுமாறு அறிவுரை கூறியதாகவும் தெரிவித்தார். காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு கேஎல் ராகுல் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் சிறப்பாக செயல்பட்டு வருவதோடு பேட்டிங்கிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

ஆசியக் கோப்பை போட்டிகளில் இருந்து தற்போது வரை 1 சதம் மற்றும் 3 அரை சதங்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வருகின்ற வாரம் இரண்டு முக்கிய போட்டிகளில் விளையாட இருக்கிறது. புதன்கிழமை ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து டெல்லியில் வைத்து விளையாட உள்ளது. அதனைத் தொடர்ந்து 14 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் வைத்து விளையாட உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles