இந்தியாவின் வெற்றிகரமான ஆல்ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இவரது வருகைக்குப் பின்னர்தான் இந்திய அணியில் பீல்டிங் முன்னேற்றம் காணப்பட்டது என்று கூட சொல்லலாம். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் லெப்ட் ஆம் பவுலரும் கூட.
2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கென்யா அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமாகியுள்ளார். 2007 டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தவர். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்தவர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். 2011ஆம் ஆண்டு உலக கோப்பையில் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பவுலிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெற்றி பெற உதவியதுடன் தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார்.
இவர் ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று அரை இறுதி வரை அழைத்துச் சென்றார். 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அதில் இருந்து மீண்டு பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். அவ்வப்போது புற்றுநோய் குறித்த பல விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார். அதன் பிறகு இந்திய அணிக்குள் மீண்டும் இடம் பிடித்து சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ளார். இப்படி பல சாதனைகளை நிகழ்த்தி உள்ள இந்திய அணியின் ஜாம்பவான் யுவராஜ் சிங் குஜராத் டைட்டன்ஸ் அணியில் பணிபுரிய ஆசிஷ் நெக்ராவை அணுகியதாகவும் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவிக்கிறார்.
இந்திய அணியில் யுவராஜ் சிங் மற்றும் நெக்ரா சகா வீரர்களாக நீண்ட காலம் விளையாடியவர்கள். ஆஷிஷ் நெக்ரா தற்போது குஜராத் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இவரது வழிகாட்டுதலில் 2022ஆம் ஆண்டு தனது அறிமுக சீசனிலேயே குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. 2023ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை வந்து தனது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது.
தனது எதிர்காலத் திட்டம் குறித்து பேசியுள்ள யுவராஜ் சிங்
“எனக்கு எதிர்காலத்தில் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று பார்ப்போம். ஆனால் இப்போது எனது குழந்தைகளுக்கு நான் முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன். அவர்கள் பள்ளி செல்லத் தொடங்கிய பிறகு எனக்கு பயிற்சி எடுக்க அதிக நேரம் கிடைக்கும். நான் எதிர்கால இளைஞர்களுடன் குறிப்பாக எனது மாநில சிறுவர்கள் உடன் பணியாற்றுவதையே நான் அதிகமாக விரும்புகிறேன்.
நிச்சயமாக ஐபிஎல் அணிகளில் ஏதேனும் ஒரு பணியில் இருப்பதை நான் எதிர்பார்க்கிறேன். நான் சக வீரர் ஆசிஸ் நெக்ராவிடம் ஏதேனும் ஒரு வேலையைக் கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்து விட்டார். எனவே இப்போது நான் சமநிலையில் இருப்பது மிகவும் அவசியம். எனவே வேறு என்ன பதவி கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். எனவே வரும் ஆண்டுகளில் நான் கிரிக்கெட்டை தொடரவும், இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்க விரும்புகிறேன்”என்று கூறியுள்ளார்.

