சமீபத்தில் இலங்கை சென்று 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் 3 டி20 போட்டிகளையும் அபாரமாக வெற்றி பெற்ற இந்தியா ஒரு நாள் போட்டி தொடரில் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து 27 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணி இடம் தொடரை இழந்து இருக்கிறது.
இது தொடர்பாக இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக சுழற் பந்துவீச்சாளர்களிடம் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். சேசிங் மாஸ்டர் என்று அழைக்கப்படும் விராட் கோலி மூன்று போட்டிகளில் இரண்டாவது பேட்டிங்கில் 1 அரை சதம் கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் விராட் கோலி உடன் ஆர்சிபி அணியில் விளையாடிய தினேஷ் கார்த்திக், விராட் கோலி குறித்து பேசி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. மேலும் தனது பேட்டியின் போது நான் விராட் கோலிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கவில்லை எனவும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இலங்கை ஆடுகளங்களின் தன்மை காரணமாகவே இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட முடியவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக விரிவாக பேசிய தினேஷ் கார்த்திக் ” இலங்கை ஆடுகளம் சுழற் பந்துவீச்சை விளையாடுவதற்கு மிகவும் கடுமையாக இருந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது விராட் கோலியாக இருந்தாலும், ரோஹித் சர்மாவாக இருந்தாலும் அந்த ஆடுகளத்தில் ரன் குவிப்பது சிரமமான ஒன்று. இந்த ஆடுகளங்களில் 8 ஓவர் முதல் 30 ஓவர்கள் வரை பேட்ஸ்மேன்கள் விக்கெட் கொடுக்காமல் ரன் குவிப்பது மிகவும் சவாலானது என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக் “இந்தத் தொடரைப் பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உலகின் பெரும்பாலான ஆடுகளங்கள் இது போல் கடினமாக இருக்காது. சுழற் பந்துவீச்சிக்கு எதிராக விளையாடுவது மிகவும் சவாலான ஒன்று. நான் இங்கு விராட் கோலிக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால் சுழற் பந்துவீச்சிக்கு எதிராக ஆடுவது மிகவும் கடினமானது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் ஆடிய விதம் வருங்காலத்திற்கு நம்பிக்கை விதைப்பதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார். இந்திய அணி தாக்குதல் பாணி ஆட்டத்தை கடைப்பிடித்ததும் இந்தத் தொடரில் இந்தியாவிற்கு கிடைத்த பாசிட்டிவான விஷயம் என தினேஷ் கார்த்திக் கூடியிருக்கிறார். ரோகித் சர்மாவின் பேட்டி மற்றும் இளம் வீரர் ரியான் பராக்கின் பந்துவீச்சையும் தினேஷ் கார்த்திக் பாராட்டினார்.
இந்திய அணி அதிகமான ஆல் ரவுண்டர்களை பயன்படுத்தியது வர இருக்கின்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு வீரரும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது சுழல் பந்துவீச்சிக்கு எதிராக சிறப்பாக விளையாடுகிறார்கள். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வரும்போது அதிகமான வேக பந்து வீச்சை எதிர்த்து விளையாடுவதால் அதற்கு அதிகமான பயிற்சி செய்கிறார்கள்.
இதன் காரணமாக சுழற் பந்து வீச்சிக்கு எதிரான அவர்களது திறமை குறைவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல் ஏலம் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு அணியும் 4 முதல் 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

