2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் கேகேஆர் – ஆர்சிபி அணிகள் விளையாடியது. அந்த போட்டியில் கேகேஆர் அணிக்காக களமிறங்கிய மெக்கல்லம் அபாரமாக விளையாடி 158 ரன்களை விளாசி தள்ளினார். ஐபிஎல் தொடருக்கே அந்த ஆட்டம் மிகப்பெரிய விளம்பரமாக மாறியது. தற்போது 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் முதல் போட்டியில் ஆடுகின்றன.
வருண் சக்கரவர்த்தி பேட்டி
அதேபோல் டி20 உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி முதல்முறையாக டி20 கிரிக்கெட் பக்கம் திரும்புகிறார். இந்த சூழலில் நாளைய ஆட்டத்திற்கு முன்பாக வருண் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தி அசத்தினார். இதனால் கேகேஆர் வருண் சக்கரவர்த்தியை தக்க வைத்தது.
இது தொடர்பாக வருண் சக்கரவர்த்தி பேசும் போது, விராட் கோலிக்கு எதிராக விளையாட போவதை நினைத்தால் உற்சாகமாக உள்ளது. அவர் எப்போதும் எனக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு எதிராக சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் கேகேஆர் அணியின் 9 வீரர்களை மீண்டும் அணி நிர்வாகம் போட்டி போட்டு வாங்கியுள்ளது.
ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யம்
ஐபிஎல் தொடரின் வடிவமே அப்படியான ஒன்றுதான். என்னதான் சிறந்த வீரர்களை உருவாக்கினாலும், அவர்களை ஏலத்தில் விட்டு மீண்டும் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு மன உறுதி முக்கியம். கடந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன்ஷிப் தொடரையே வென்றிருந்தாலும், மீண்டும் முதல் படியில் இருந்து தொடங்க வேண்டும்.
கிரிக்கெட்டில் எப்படி முதல் போட்டியில் சதம் அடித்தாலும், அடுத்த போட்டியி ஜீரோவில் இருந்து தொடங்குவோம். அதேபோன்றதுதான் ஐபிஎல் தொடரும். இதன் காரணமாகதான் ஐபிஎல் மற்ற லீக் போட்டிகளில் இருந்து மொத்தமாகவே வித்தியாசமானது என்று தெரிவித்தார். கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட ஃபார்மில் உள்ள வருண் சக்கரவர்த்தி, இம்முறை எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

