நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் பிரம்மாண்ட ஸ்கோர்களை அடித்துத் தள்ளும் ஹைதராபாத் அணியை 120 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் இளம் வீரர் ரகுவன்ஷி மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் அதிரடியாக அரை சதம் விளாசி அணிக்கு வலுவான அடித்தளம் கொடுத்தனர்.
போட்டி முடிந்த பிறகு, ஏலத்தில் அதிக விலைக்கு சென்றதால் ஏற்பட்ட அழுத்தம் பற்றி பேசினார். வெங்கடேஷ் ஐயர். நவம்பர் மாதம் நடந்த ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 23.5 கோடி வரை ஏலம் கேட்ட போதிலும், விட்டுக் கொடுக்காமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ₹23.75 கோடிக்கு மீண்டும் வாங்கியது. 2021 முதல் அவர் வெளிக்காட்டிய அதிரடி ஆட்டமும், நாக் அவுட் போன்ற அழுத்தமான நேரங்களில் தொடர்ந்து அவர் கொடுத்த சிறப்பான ஆட்டங்களும் தான் கொல்கத்தா அணியின் நம்பிக்கை பெற்றுள்ளது.
பெரிய தொகைக்கு செல்லும் வீரரின் மேல் எப்போதும் அழுத்தம் நிறைய இருக்கும். இந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளில் வெங்கடேஷ் 3, 0*, 6 என மிகச் சொற்பமாகவே பங்களித்தார். ஆனால், நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முழு ஆற்றலையும் வெளிக்காட்டி 29 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸ் உட்பட 60 ரன்கள் விளாசி அணியை 200/6 என்ற இலக்குக்கு அழைத்துச் சென்றார் போட்டிக்குப் பின் அவர், இந்த ஆட்டம் பற்றியும் அவருக்கான விலை பற்றியும் விரிவாகப் பேசினார்.
அவர் கூறியதாவது, “ ஐபிஎலில் 20 லட்சமோ 20 கோடியோ, விலை முக்கியமல்ல. பணம் உங்கள் ஆட்டத்தை ஒருபோதும் தீர்மானிக்காது. ஆம், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர்களிடம் எதிர்பார்ப்புகள், அழுத்தம் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதற்காக அதிக தொகை பெறும் நான், எல்லாப் போட்டிகளிலும் ரன்களைக் குவிக்க வேண்டும் என்ற அவசியம் என்ன ? ” என்ற கேள்வியை எழுப்பினார்.
மேலும், ” ஒரு சில நேரங்களில் நான் சில பந்துகளை மட்டுமே விளையாட வாய்ப்புக் கிடைக்கும், அதனால் நான் எவ்வளவு அடிக்கிறேன் என்பதை விட எந்த அளவு தாக்கதைத் தருகிறேன் என்பது தான் பார்க்க வேண்டிய விஷயம். போட்டியின் சூழலை புரிந்து அதற்கேற்ப விளையாடி அணிக்காக வெற்றிப் பெறுவதே என் நோக்கம். ” என்றார் வெங்கடேஷ் ஐயர்.

