இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் . இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கார் விபத்தில் படுகாயம் அடைந்து அதிலிருந்து மீண்டு வந்து தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ரிஷப் பண்ட் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர். குறிப்பாக 2020/21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர். பல டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டத்தின் போக்கை தனது அதிரடியான அணுகுமுறையால் இந்தியாவிற்கு சாதகமாக திசை திருப்பியவர்.
இவர் காயம் அடைந்ததிலிருந்து இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டியில் சரியான ஒரு மாற்று வீரர் அமையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. கேஎஸ் பரத் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடினார. ஆனால் அவரது பேட்டிங் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது.
இதன் காரணமாக அணி நிர்வாகம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை நீக்கிவிட்டு இஷான் கிசானை விக்கெட் கீப்பராக நியமித்தது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அவர் ஒரு அரை சதம் எடுத்திருக்கிறார். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை இந்தியா ரிஷப் பண்ட்டை மிகவும் மிஸ் செய்கிறது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
ரிஷப் பண்ட் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய ரோஹித் சர்மா” ரிஷப் பண்ட் அவரது அதிரடி ஸ்டைலிலேயே விளையாடவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது கேம் பற்றிய புரிந்துணர்வு அவருக்கு இருக்கிறது. மேலும் அவரது ஆட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அதனால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். அதற்காக ரிஷப் பண்ட் பிடிவாதமாக அதே முறையில் தான் ஆடுவார் என்று அர்த்தம் இல்லை” எனக் கூறினார்.
மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா” அவர் தன் மீதான விமர்சனங்கள் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அவரது ஆட்ட திறன் என்ன என்று அவருக்கு நன்றாக தெரியும். அதன் மீது நம்பிக்கை வைத்து அதிரடியாக ஆடுகிறார். நான் அவரிடம் உரையாடும் போது எல்லாம் அவர் சொல்வது ஒரு விஷயம் தான். நான் எப்போதும் ஆட்டத்தின் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு தான் விளையாடுகிறேன். சில நேரங்களில் சூழ்நிலை மிகவும் சவாலாக இருக்கும். அப்போது போட்டி யார் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலையில் எனது அதிரடியின் மூலம் ஆட்டத்தை நம் கைக்கு கொண்டு வர நினைக்கிறேன் என்று ரிஷப் பண்ட் கூறியதாக தெரிவித்தார்.
“அவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல போட்டிகளை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றி இருக்கிறார். அதை நாமும் பார்த்திருக்கிறோம். அவர் அணியில் ஒரு முக்கியமான வீரர். அவரைப் போன்ற ஒரு வீரர் அணியில் நிச்சயமாக இடம்பெற வேண்டும். ரிஷப் பண்ட் சந்திக்கும் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடக்கூடிய திறமையை பெற்றிருப்பவர் என தெரிவித்தார்”ரோகித் சர்மா

