பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பந்தை சுற்றக்கூடிய சாதாரண பேட்ஸ்மேன் என்று விமர்சனம் செய்திருந்தார். மேலும் அவருக்கு உடலைப் பார்த்து பந்தை வீசினால் சிக்கிக் கொள்வார் என்றும், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற பந்து நகரும் இடங்களில் அவர் சிறப்பாக விளையாடினால் மட்டும்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் விமர்சனம் செய்திருந்தார். தற்போது இதற்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்து பேசியிருக்கிறார்.
” இப்பொழுது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? அமீர் வந்து இப்படி சொல்லி இருக்கிறார். ஆனால் நான் சொல்கிறேன் அபிஷேக் ஷர்மா மிகச்சிறந்த பேட்ஸ்மேன். அவருக்கு பந்து எங்கிருந்து வருகிறது என்று நன்றாகவே தெரியும். அவருக்கு மைதானத்தின் முன்புறங்களில் எல்லா பக்கமும் ஷாட் இருக்கிறது. அவர் பந்தை பார்க்காமல் சுற்றக்கூடிய பேட்ஸ்மேன் கிடையாது. ஏற்கனவே உலக கிரிக்கெட்டில் அவர் யார் என்று தன்னை நிரூபித்து விட்டார்”
“அபிஷேக் ஷர்மா கிரீசில் இருந்தால் தான் யார் என்பதை சிறிது நேரத்தில் எல்லோருக்கும் காட்டி விடுவார். கடந்த நான்கைந்து மாதங்களாக இவர்களின் கனவில் அவர் இருந்து வருகிறார். இவர்களுடனான அடுத்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடிவிட்டால் அடுத்த ஆறு மாதம் அவர்களது கனவில் இருக்கப் போகிறார். உண்மையாக பந்தை பார்க்காமல் சுற்றக்கூடிய பேட்ஸ்மேன் யார் என்று நான் சொன்னால் தேவையில்லாத பிரச்சினைகள் வரும். மேலும் நான் இதில் ட்ராமாவை உருவாக்க விரும்பவில்லை” என்று கூறி இருக்கிறார்.

