சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மேலும் ஒரு சோகமான விஷயமாக குஜராத் கேப்டன் கில்லுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி களம் இறங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்தது. மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் அணி 168 ரன்கள் குவித்த போதும் அதனை குஜராத் அணி பந்துவீச்சாளர்கள் வெற்றிகரமாக செயல்பட்டு மும்பை அணியின் வெற்றியை தடுத்து நிறுத்தினர்.
அப்போட்டியில் குஜராத் அணி வீரர்களிடையே காணப்பட்ட ஒரு உத்வேகம் இப்போட்டியில் சுத்தமாக தென்படவில்லை. ஒட்டுமொத்தமாக சரணடைந்து ஏதோ கடமைக்கு பந்து வீச வேண்டும் என்பது போல வீசினர். இதனால் சென்னை அணியின் ரன் வேகத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் விளைவாக ரச்சின் ரவீந்திரா 46 ரன்களும், ருத்ராஜ் 46 ரன்களும், சிவம் துபே 51 ரன்களும் குவித்தனர். 200 ரன்களுக்கு மேல் சென்றாலே அதனை சேஸ் செய்வது என்பது சற்று கடினமான இலக்கு. இதனை மனதில் வைத்த குஜராத் அணியினர் சேஸ் செய்யவே முடியாது என்பது போல பேட்டிங்கிலும் சொதப்பினர். முக்கியமாக அணியின் கேப்டன் கில் 8 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
பின்னர் வந்த பேட்ஸ்மேன்களில் சாய் சுதர்சன் மட்டும் ஓரளவு நிலையாக நிலைத்து நின்று 37 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே குறைந்த ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இதன் காரணமாக 68 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் கில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டார். முக்கியமாக விக்கெட்டுகள் விழாத காரணத்தினால் ஃபீல்டு செட்டப்பை மாற்றி அமைத்தது மற்றும் பந்துவீச்சாளர்களுடன் பேசியது என்று நேரம் போனதால் ஐபிஎல் நிர்வாகம் அவருக்கு தாமதமாக பந்து வீசியதற்காக 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் கூறுகையில்
“குஜராத் அணியின் கேப்டன் கில் பந்து வீச அதிகம் நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் குறைந்தபட்ச ஓவர் ரேட் தொடர்பாக, குஜராத் அணிக்கு இது முதல் தாமதம் என்ற காரணத்தினால் அணியின் கேப்டன் கில்லுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இந்த தாமதம் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்தால் போட்டியில் விளையாட தடையும் ஏற்படும்” என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே போட்டியில் தோல்வியடைந்த சோகத்தில் இருக்கும் கில்லுக்கு இந்த அபராதமும் சேர்ந்து கொண்டது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் குஜராத் அணி அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டு வெற்றி பெறும் என்று நம்பலாம்.

