ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணி தடுமாறி வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சமன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி சீசனில் இந்திய அணி வீரர்கள் 7 விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது,தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த சூழலில் அணியில் இருக்கும் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். ரோகித் சர்மா நடப்பு தொடரில் 5 இன்னிங்சில் மொத்தமாக 31 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அணியில் இருக்கும் இளம் வீரர்களும் தடுமாறி வருகிறார்கள். இந்த நிலையில் சீனியர் வீரர்களான புஜாராவை இந்திய அணி ரொம்பவே மிஸ் செய்து வருகிறது.
இந்த நிலையில் தான் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளியே வந்திருக்கிறது. அதாவது ஆஸ்திரேலிய தொடருக்கு புஜாரா போன்ற சீனியர் வீரர் வேண்டும் என்று தேர்வு குழு உறுப்பினரிடம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். புஜாரா இருந்தால் தான் ஆஸ்திரேலிய தொடரில் பந்துவீச்சை சமாளிக்க முடியும் என்றும் அவர் தேர்வு குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
ஆனால் தேர்வு குழுவினர் இனி இளம் வீரர்களை நோக்கி இந்திய அணி நகர்ந்துவிட்டதாகவும் இளைஞர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் இடம்பெறவில்லை. அணியில் உள்ள இளம்வீரரான கில்லும் காயம் காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை.
இந்த சூழலிலாவது புஜராவை தேர்வு குழு தேர்வு செய்திருக்கலாம். புஜாரா மட்டும் இருந்திருந்தால் ஒருவேளை இந்திய அணி இந்த தொடரில் ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கலாம். நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் சொந்த மண்ணில் சொதப்பிய போதே அணியில் தமக்கு புஜாரா வேண்டும் என்று முடிவில் கம்பீர இருந்ததாகவும், ஆனால் அதற்கு தேர்வு குழு தலைவர் அகார்கர் தான் முட்டுக்கட்டை போட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. புஜாராவை தேர்வுக்குழு தேர்வு செய்யாததற்கு தற்போது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

