இந்தியா அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் முடிவடைந்த நிலையில் அதனை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. இந்த உலகக் கோப்பையுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பணி காலம் முடிவடைந்ததால் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். 2027 ஆம் வருடம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் வரை கௌதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அவருடன் துணை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் மற்றும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆல் ரவுண்டா ரியான் டெண்டோஸ்சாட் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் மோர்னி மார்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பயிற்சியாளர்களின் தலைமையில் இந்திய அணி அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி, 2026 டி20 உலக கோப்பை மற்றும் 2027 ஆம் வருடம் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் கௌதம் கம்பீர் நீண்ட நாட்களுக்கு பயிற்சியாளராக பணியாற்ற மாட்டார் என இந்தியாவின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜோஹிந்தர் சர்மா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஜோஹிந்தர் இதனை தெரிவித்து இருக்கிறார். 2007 ஆம் வருடம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் இந்தியா அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஜோஹிந்தர் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம் கம்பீர் குறித்து பேசிய ஜோஹிந்தர் சர்மா ” இந்திய அணியை வழிநடத்திச் செல்லும் முக்கியமான பொறுப்பு கௌதம் கம்பீருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் அந்தப் பொறுப்பில் சிறப்பாக செயல்படுவார். எனினும் கௌதம் கம்பீர் நீண்ட காலம் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட மாட்டார்” என தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய ஜோஹிந்தர் சர்மா ” கௌதம் கம்பீர் தன்னுடைய மனநிலையில் முடிவுகளை எடுக்கக் கூடியவர். இதனால் அவருக்கும் அணியில் இருக்கும் வீரர்களுக்கும் இதற்கும் முன் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. நான் இதில் விராட் கோலி குறித்து குறிப்பிடவில்லை. இதற்கு முன்பும் பலமுறை கௌதம் கம்பீர் எடுத்த முடிவுகள் வீரர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இதன் காரணமாகவே அவர் நீண்ட நாட்கள் இந்திய அணியில் பயிற்சியாளராக தொடர மாட்டார் எனக் கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.
தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரின் திறமை குறித்து பேசிய ஜோஹிந்தர் ஷர்மா, அவர் மிகச் சிறந்த பயிற்சியாளர் என குறிப்பிட்டார். லக்னோ அணிக்கு பயிற்சியாளராக இருக்கும்போது சிறப்பாக செயல்பட்டார் என தெரிவித்த அவர் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக இருந்து இந்த வருட ஐபிஎல் கோப்பையை கேகேஆர் அணி கைப்பற்றியதையும் சுட்டிக்காட்டினார். மேலும் கௌதம் கம்பீர் தன்னுடைய பணியை மிகத் திறமையாக செய்யக்கூடியவர் என்று குறிப்பிட்ட ஜோஹிந்தர் சர்மா எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அணிக்காக முழு மனதுடன் பணியாற்றக்கூடியவர் கம்பீர் எனவும் கூறினார் .

