வளர்ந்து வரும் நவீன கிரிக்கெட்டில் இந்தியா, மிகப்பெரிய சக்தியாக உருவாகி இருக்கிறது. தற்போது இருக்கும் இந்திய அணியை பார்த்தால் சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றாலும் அது குறித்து எந்த கவலையும் பட தேவையில்லை.
உதாரணமாக டி20 ஃபார்மெட்டிலிருந்து ரோஹித், விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் அவர்களது இடத்தை நிரப்ப கில்,ஜெய்ஸ்வால் மற்றும் அபிஷேக் ஷர்மா அக்சார் பட்டேல் போன்ற வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியா எப்படி தரமான வீரர்களை உருவாக்குகிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியிருக்கிறார்.
இந்தியா தற்போது இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில், அணியில் இடம்பெற்ற வீரர்களை தவிர ருத்துராஜ், அபிஷேக் ஷர்மா போன்ற தரமான வீரர்களும் அணிக்கு வெளியே இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இப்போது உள்ள இந்திய அணியை பார்த்தால் இரண்டு, மூன்று தரமான அணிகளை உருவாக்க முடியும் என்று சல்மான் பட் கூறியிருக்கிறார்.
இது குறித்த அவர் விரிவாக கூறும்போது “தற்போது நடைபெற்று வரும் இலங்கைத் தொடரை பார்த்தால் ருத்ராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் சஞ்சு சாம்சனுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் பும்ரா ஓய்வில் இருக்கிறார். இதுதான் தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் ஆழம். அவர்களது கிரிக்கெட் பாதை வலுவாக இருப்பதால் இந்தியாவால் சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று தரமான அணிகளை உருவாக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் இந்தியா ஏ அணி விளையாடும் அட்டவணை மிகப்பெரியதாக இருக்கிறது. அதனால் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் விளையாடும் படி வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்தியாவில் தரமான வீரர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். இதனால்தான் அவர்கள் மூன்று சிறந்த அணிகளை உருவாக்கி இருக்கிறார்கள். மேலும் இந்தியா மட்டுமே பிரான்சிஸ் தொடரில் ஒரே ஒரு டி20 லீக்கில் மட்டும் விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:பும்ராவை பார்த்து பயப்படாதீங்க.. ஏன்னா அவருக்கும் இந்த சிக்கல் இருக்கும் – கூறுகிறார் இலங்கை பயிற்சியாளர் ஜெயசூர்யா
இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுகிறார்கள். வேறு எந்த டி20 தொடரிலும் அவர்கள் விளையாடுவதில்லை. இந்தியாவில் எப்படி வீரர்கள் உருவாகிறார்கள் என்று இனியும் கேட்டால் உங்களுக்கு அதை கடவுள் தான் விளக்க முடியும். இந்தியா தற்போது முன்னேறி வரும் நிலையில் அதற்கு ஆஸ்திரேலியா கூட பக்கத்தில் நிற்காது. மற்ற சர்வதேச நாடுகளை காட்டிலும் இந்தியா தற்போது கிரிக்கெட்டில் சிறந்து விளங்குகிறது என்பதுதான் உண்மை” என்று கூறியிருக்கிறார்.

